சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 09.03.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த முடிவால், வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது விரைவில் தெரியவரும் எனக் கூறப்பட்ட நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஒருபுறம், தேமுதிக தனியாக தேர்தலில் களம்காண இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மறுபுறம், அமமுக உடன் திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அமமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பழனியப்பன், மாணிக்க ராஜா ஆகியோருடன் தேமுதிகவைச் சேர்ந்த பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகியோர் பேசியதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் தனித்து களம்காணும் முடிவை தேமுதிக எடுத்துள்ளதாக நேற்று (11.03.2021) மீண்டும் தகவல்கள் வெளியாகியன. இந்நிலையில் மீண்டும் அமமுகவுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி.தினகரன், ''தேமுதிகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும். நான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன். கோவில்பட்டி மக்கள் எனக்கு வெற்றியைத் தருவார்கள். அவரவர்கள் அவர்களது சின்னம் மற்றும் தொண்டர்களை நம்பிதான் தேர்தலில் நிற்பார்கள்'' என்றார்.