Skip to main content

மரக்கன்று வளருங்க.. தங்க நாணயம் வெல்லுங்க.. லட்சம் மரக்கன்றுகள் லட்சியம்!

Published on 23/12/2018 | Edited on 23/12/2018
g


கஜாவின் தாக்கம் டெல்டாவை புரட்டிப் போட்டது. பனை தவிர அத்தனை மரங்களையும் சாய்த்துப் போட்டது புயல். மரம் வளர்ப்போம் மழை பெருவோம் என்று தொடங்கி மரக்கன்றுகளையும் விதைப் பந்து, விதைப் பென்சில்களையும் மாணவர்கள் மத்தியில் வழங்கி வந்த கிரீன் நீடா வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்டு வந்தனர்.


 பல நூறு வருட பழமையான மரங்கள் சாய்ந்து போனாலும் சிலமாதங்களாக நட்டு வந்த பல ஆயிரம் மரக்கன்றுகள் தலைநிமிர்ந்து  தலையசைத்து நிற்கிறதைப் பார்த கிரீன் நீடாவுக்கு ஒரு சந்தோசம். இழந்த மரங்களை நடுவோம் இயற்கையை மீட்போம். சுகாதாரம் காப்போம் மழைத்துளிகளை மண்ணுக்கு இழுப்போம் என்ற பறந்து விரிந்த மனதோடு மீண்டும் களமிறங்கியுள்ளனர். 

 

g


மரக்கன்றுகளை குழந்தைகளிடம் கொடுத்தால் வளர்த்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்க தொடங்கியுள்ளனர்.

இதன் தொடக்கமாக மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நீடாமங்கலம் கிரீன் நீடா அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் விழா நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியில் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வரவேற்றார்.

   
மூத்த செய்தியாளர் கி.சேதுரத்தினம், ஏ.ஐ.டி.யூ.சி மாநில இணை செயலாளர் ஜெ.குணசேகரன், வர்த்தக சங்கதலைவர்  பி.ஜி.ஆர்.ராஜாராமன், சமூக ஆர்வலர்கள்  ப.பத்மநாபன், கே.ஆர்.கே.ஜானகிராமன், சீனு.ராஜா, பாபு, வெங்கட்,
பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செயலாளர் ஜெகதீஸ்பாபு, தலைவர் நேரு ஆகியோர் மாணவர்களுக்கு பழமரக்கன்றுகளை வழங்கினர்.
 


ஆசிரியர்கள் சா.திராவிடமணி, கோ.உதயகுமார், காளியப்பன், சிங்கார கஸ்தூரி பாய், கலைவாணி, கல்பனா கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும் புங்கன் மரக்கன்றுகள் நடப்பட்டது. 

 

g


கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு  கூறும்போது.., கஜா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கோடிக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து அழிந்து உள்ளது. இதனால் வரும் கோடை காலத்தில் பொது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் வெப்ப நோய் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெப்ப நோய் தாக்கத்திலிருந்து மக்களை காக்க இலட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி நட செய்கிறோம். சிறப்பாகவும் செழிப்பாகவும் வளர்க்கும் மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்குகிறோம். இது மாணவர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றார். மேலும் இந்த ஆண்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே எங்கள் லட்சியம். அந்த லட்சியத்தை நிறைவேற்ற இளைஞர்களும் மாணவர்களும் துடிப்போடு களம் இறங்கியுள்ளனர். மாணவர்களிடம் வழங்கும் கன்றுகளை அக்கரையோடு வளர்ப்பார்கள் என்பதால் தான் மாணவர்களுக்கு வழங்குகிறோம் என்றார்.

 

மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களோ.. கஜா புயலால் எங்கள் வீடுகளில் நின்ற மரங்கள் சாய்ந்தது. அதனால் மறுபடியும் பசுமை காக்க மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம் என்றனர்.

 முடிவில் தலைமை ஆசிரியை க.தேவிலெட்சுமி நன்றி கூறினார்.
  

சார்ந்த செய்திகள்

Next Story

பச்சை வண்ணக்கடலாக பாம்பன்: இனி எல்லாம் பச்சை மயமே: எச்சரிக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகம்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

 

 

கடல்வாழ் உயிரினங்களின் உயிர்க்கோள காப்பக மன்னார்வளைகுடாப் பகுதியான ராமேசுவரத்தில் பாம்பன் கடல் பகுதியில் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது மட்டுமில்லாமல், அப்பகுதியில் மீன்களும் இறந்து குவிவதால் மீனவர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 

எண்ணற்ற உயிரிகளையும், ஏராளமான கடல்வளத்தையும் உள்ளடக்கியது மன்னார்வளைகுடாப் பகுதி. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள இப்பகுதியிலுள்ள பாம்பன் குந்துகால் சின்னபாலம் கடல் பரப்பு, சிங்கிலி தீவு மற்றும் குருசடை தீவு உள்ளிட்ட பல தீவுகளை உள்ளடக்கிய இக்கடல் பகுதி மிகவும் முக்கியமானது. இங்குள்ள பாம்பன் குந்துகால் பகுதியில் நேற்று மாலை வேளையில், நீல நிறத்திலுள்ள கடல் திடுமென பச்சை வண்ணத்திற்கு மாறி காட்சியளித்தது. அத்துடன் மாசுகள் குவிந்து நுரை மிதந்ததால் சுவாசிக்க வழியின்றி, இப்பகுதியிலுள்ள கிளி, ஓரா மீன்கள் செத்து குவிந்தது. இதனால் பதட்டமடைந்த மீனவர்களும், பொதுமக்களும் அருகிலுள்ள மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 


 

சம்பவ இடத்திற்கு வந்த ஆராய்ச்சி நிலையத்தார் பெரிய பெரிய டப்பாக்களில் நீரை சேமித்தவர்கள், இறந்து கிடந்த மீன்களையும் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ''இது ஜூலை முதல் செப்டம்பர் வரை கடலில் இயற்கையாக நடக்கக்கூடிய மாற்றமே" என்றனர். எனினும், நேற்று மீன்கள் இறந்த நிலையில் இன்று நண்டுகளும் இறந்து கிடக்க, இதற்காகவே காத்திருக்கும் பறவைகளும் மயங்கி, இறந்து கிடக்கும் மீன்களை உணவிற்கு எடுத்துச் சென்று அக்கம் பக்கத்திலுள்ள குடியிருப்புப் பகுதியில் போடுவதால் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.


 

"கடலில் காணப்படும் ஒரு வகை பாசியான டைடோபிளாங்டன் - ஆல்கே என்ற தாவர நுண்ணுயிர்கள் கடலின் நீல நிறத்தை கிரகித்து பச்சை வண்ணமாக மாற்றுகிறது. கடலில் இந்த பச்சை நிறங்கள் எங்கெங்கு காணப்படுகின்றதோ அதில் அதிகப்படியான வெப்பமும், கார்பன் டை ஆக்சைடும் கண்டிப்பாக இருக்கும். அது ஆபத்தானதும் கூட. இனிவரும் காலங்களில் அனைத்துக்கடல்கள் நீல நிறத்திலிருந்து பச்சை வண்ணமாக மாற சாத்தியம் அதிகம்" என தனது ஆய்வில் எச்சரித்துள்ளது அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்பதும் நினைவிலிருக்க வேண்டிய ஒன்று.

 

Next Story

குருங்காடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கிய கிரீன் நீடா அமைப்பு!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை மையமாக கொண்டு இழந்து வரும் பசுமையை காக்க புயலில் அழிந்த மரங்களை மீட்க உருவாக்கப்பட்டது கிரீன் நீடா என்ற அமைப்பு. தன்னார்வமுள்ள இயற்கை ஆர்வலர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு நீடாமங்கலம் முதல் சுற்றுவட்டார கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். நஞ்சில்லா உணவுக்காக நாட்டுக் காய்கறிகளின்  மாடித்தோட்டம் அமைப்பதை முன்னெடுத்து பயிற்சியும் கொடுத்து விதைகளையும் வழங்கினார்கள்.

இவர்களின் அடுத்த முயற்சியாக கிராமங்களில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குருங்காடுகளை உருவாக்குவது. அதன் முதல்கட்டமாக நீடாமங்கலம் பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 25 ஆயிரம் சதுரடி நிலத்தில் குருங்காடு அமைக்க கிரீன் நீடாவுடன் கைகோர்த்தது பேரூராட்சி நிர்வாகம். குருங்காடு அமைக்க வேண்டும் என்றது கிரீன் நீடாவுடன் 15 தன்னார்வ அமைப்புகளும் இணைந்தார்கள் ஆர்வமுள்ள தனிநபர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இந்ததகவல் அறிந்த இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தனது அறக்கட்டளையில் இருந்து மரக்கன்றுகளை வழங்குவதாக சொன்னதுடன் பலன் தரும் பல வகையான  சுமார் 1000 பழ மரக்கன்றுகளை  வழங்கினார். 25 ஆயிரம் சதுரடியில்  நடைபயிற்சிக்காகவும் காட்டின் மையத்தில் நூலகம் படிப்பகம் அமைக்கவும் இடம் ஒதுக்கிவிட்டு 2 அடிக்கு ஒரு கன்று வீதம் நடவு செய்தனர். பேரூராட்சியில் சேகரிக்கப்பட்ட மட்கும் குப்பைகளை அடிய உரமாக போட்டு கன்றுகள் நடப்பட்டுள்ளது.
    

 

இது குறித்து கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறும்போது.. 

புயல்களில் அழிந்த மரங்களை மீட்க உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று பள்ளிகளிலும் பரவியுள்ளது. கிராமங்களில் நாங்கள் நட்ட மரக்கன்றுகள் வளர்கிறது. அடுத்தகட்டமாக தான் குருங்காடு வளர்ப்பு திட்டம். முதலில் பேரூராட்சியுடன் இணைந்து முதல்காட்டை உருவாக்கியாச்சு அடுத்து இதுபோல இடங்களை காட்டினால் காடு வளர்க்க தயாராக உள்ளோம். காட்டுக்குள் தூய காற்றை சுவாசிக்க நடைபாதையும் இயற்கையோடு இருந்து படிக்க நூலகம், படிப்பகம் அமைக்கப்படுவதுடன் பறவைகளுக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்படும். 10 ஆண்டுகளில் வளர்க்க வேண்டிய மரங்களை குருங்காடுகளில் 3 ஆண்டுகளில் வளர்த்துவிடுவோம். எங்கள் முயற்சிக்கு தன்னார்வலர்களின் ஒத்துழைப்பும் உதவியும் நிறைய கிடைக்கிறது. தற்போது கூட முதல் குருங்காட்டுக்கான மரக்கன்றுகளை சென்னை கிருஷ்ணபிரியா அறக்கட்டளையினர் வழங்கியுள்ளனர். அதேபோல பலரும் உதவியுள்ளனர் என்றார்.