Skip to main content

போதைப் பொருட்களுக்கு எதிரான 'நம்ம ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி- வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருட்களால் இளைய சமுதாயத்தினர் சீரழிவை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதியைக் கடைபிடிக்காததால் அதிகமான விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'நம்ம ஸ்ட்ரீட்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட நிர்வாகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் பேரூராட்சி, சிதம்பரம் வர்த்தக சங்கம், சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்றச் சங்கம், ஜாரோ உணவு டெலிவரி நிறுவனம், கஸ்தூரிபாய் கம்பெனி, மூர்த்தி கபே, உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.  இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் வாசித்தார்.  இதனை அனைவரும் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

இதனைத்தொடர்ந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசுகையில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நாம் முழுமையாக அறிய வேண்டும். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் என இந்த நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாகப் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மாநகரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முதல் முறையாக அண்ணாமலை நகர் பேரூராட்சியில் நடைபெறுகிறது. இது இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாணவர்களிடத்தில் மன அழுத்தத்தை போக்குகின்ற விதமாகவும் போதைப் பழக்க வழக்கங்களுக்கு உட்படாமல் நல்வழியில் செல்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்'' எனப்பேசினார்.

 

இந்நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. காலை 5 மணியிலிருந்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கூட்டம் வர தொடங்கியது. இதில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, கோலிகுண்டு, ஆடுபுலி ஆட்டம், உரியடித்தல், பம்பரம் விளையாடுதல், டயர் தூக்குதல், கயிறு இழுத்தல், வில் அம்பு விடுவது உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாக நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை கலந்து கொண்டு விளையாடினார்கள். இது அனைத்து தரப்பினர் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கூடுதல் ஆட்சியர் மதுபாலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், சிதம்பரம் சார் ஆட்சியர் சுவேதாசுமன், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சித்து உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்