
ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் நேற்று முன் தினம் காலையில் கைது செய்யப்பட்டார். 10 மணி நேர சட்டப்போராட்டத்திற்கு பின்னர் மாலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆசிரியரின் விடுதலை மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்று ஊடகத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பெரியார் திடலில் ’‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்,- பாராட்டும்’ எனும் தலைப்பில் இன்று 11.10.2018 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில் விடுதலை பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்து உரையாற்றுகிறார். முரசொலி சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனசக்தி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்து என்.ராம், மணிச்சுடர் சார்பில் கே.ஏ.எம்.அபுபக்கர், மக்கள் உரிமை சார்பில் பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லா, தீக்கதிர் பொறுப்பாசிரியர் அ.குமரேசன், கலைஞர் தொலைக்காட்சி ப.திருமாவேலன் ஆகியோர் உரையாற்ரினார்கள்.


இக்கூட்டத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால் பாராட்டப்பட்டார்.
அவருக்கு கி.வீரமணி பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்த சட்டப்போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற இந்து என்.ராமுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார் கி.வீரமணி. இப்போராட்டத்திற்கு குரல் கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்தார் கி.வீரமணி.
