Skip to main content

நக்கீரன் இணைய செய்தி எதிரொலி.. நெல் ஜெயராமனை நேரில் பார்த்த அமைச்சர்கள்-மருத்துவ செலவுகளை ஏற்கவும் தமிழக அரசு முடிவு!!

Published on 13/11/2018 | Edited on 15/11/2018

அழிந்துவிட்ட 169 நம் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்தவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையும் அவருக்கான சிகிச்சை செலவுகளையும், நெல் ஜெயராமன் மகன் சீனிவாசராமின் படிப்பு செலவுகளையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

 

nel jayaraman

 

அதேபோல திரைத்துறையினரும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நெல் ஜெயராமனை நேரில் பார்த்து நலம் விசாரித்து வருவதுடன் ஆறுதலாக உதவிகளும் செய்து வருகின்றனர். இந்த தகவல்களை நக்கீரன் இணைய தளத்தில் செய்தியாக வெளியிட்டு வருகிறோம்.

 

இந்த நிலையில் 12ந் தேதி இரவு “ நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம்.. உங்களை காப்பாற்றுவது எங்கள் கடமை.. நெல் ஜெயராமன் மருத்துவச் செலவை ஏற்ற நடிகர் சிவகார்த்திகேயன்!” என்ற தலைப்பில் உருக்கமான செய்தி வெளியிட்டோம். செய்தியின் முடிவில், இது போன்ற பொக்கிஷங்களை காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் உள்ளது தானே என்ற விவசாயிகள் கேட்பதையும் காட்டி முடித்திருந்தோம். இரவிலேயே இந்த செய்தி வேகமாக பரவியது. அதன் விளைவு..

 

நக்கீரன் இணைய செய்தி பற்றி அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, பாலகிருஷ்ணா ரெட்டி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் வைரமுத்து ஆகியோரை நெல் ஜெயராமனை பார்க்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


    

nel jayaraman

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பார்த்து அவரது மருத்துவ அறிக்கைகளை பார்த்த பிறகு உங்கள் உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் குணமடைந்துவிடும் என்று சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியில் வந்து, ”நெல் ஜெயராமன் உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். அந்த தகவலை அவரிடமும் அவரது உறவினர்களிடம் கூறினோம். நெல் ஜெயராமன் இந்தத் தகவல் ஊக்களமிப்பதாகக் கூறினார். அவருக்கு என்ன மாதிரியாக உதவிகள் செய்ய வேண்டுமோ அதை தமிழக அரசு செய்யும்” என்றார். 

நக்கீரன் இணைய செய்தியால் தமிழக முதல்வர் அறிவுறுத்தல்படி அமைச்சர்கள் சென்று நெல் ஜெயராமனை சந்தித்து உதவிகள் செய்வதாக கூறியிருக்கிறார்கள். நன்றி.

 

 

சார்ந்த செய்திகள்