
தூத்துக்குடி மடத்தூர் சிப்காட் பகுதியில் தனியார் உப்பு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உப்பு பாக்கெட்டுகளை பண்டல் போடுவதற்காக பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அந்த நிறுவனத்தின் அருகிலேயே ஷெட் அமைத்துத் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதத்துக்கு முன்பு விடுமுறையில் பீகார் சென்று விட்டு மீண்டும் தூத்துக்குடி திரும்பி வரும்போது, பீகாரில் இருந்து உயர் ரக கஞ்சா செடியை கையோடு கொண்டு வந்து வேலை பார்க்கும் உப்பு ஏற்றுமதி நிறுவனத்தின் வளாகத்தில் ஒரு பகுதியில் கஞ்சா செடியை நடவு செய்து கடந்த ஆறு மாதமாக கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர்.
உப்பு ஏற்றுமதி நிறுவனத்தில் கஞ்சா செடி வளர்க்கப்படும் தகவல் காவல்துறைக்கு கிடைத்ததை தொடர்ந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், எஸ்.ஐ.க்கள் ரவிக்குமார், சுப்புராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சுமார் 4 அடி உயரத்துக்கு கஞ்சா செடி பசுமையாக செழித்து வளர்ந்து நின்றது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சா செடியை வேரோடு பிடுங்கி சாக்கு பையில் அடைத்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக அங்கு தங்கியிருந்த வட மாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பீஹார் மாநிலம் ஷாட்பூரை சேர்ந்த 29 வயதான பிஜிலி பாஸ்வான், மங்கராகிரியை சேர்ந்த 29 வயது முன்னா திவான், டீகாபூரை சேர்ந்த 19 வயது சதீஷ்குமார், ராஜ்பகாரை சேர்ந்த 28 வயதான மனிஷ் ஷா, ஆகிய நான்கு பேரும் கூட்டணி அமைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்ததும், கஞ்சா இலைகளை பயன்படுத்தி ஆவி பிடித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து நான்கு பேரையும் மடக்கிப் பிடித்த போலீசார் அவர்கள் ஒன்றாக தங்கி இருந்த ஷெட்டை சோதனையிட்டனர் அங்கு 1/4 கிலோ கஞ்சா, கஞ்சா செடியின் உலர்ந்த இலைகள், பூக்கள், தண்டுகள், கஞ்சா பயன்படுத்துவதற்கான இரண்டு பைப்புகள், பான் மசாலா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும், அவர்களிடமிருந்து நான்கு மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பீகாரில் இருந்து கஞ்சா செடி கொண்டுவரப்பட்டு உப்பு ஏற்றுமதி நிறுவனத்தில் செழிப்பாக வளர்க்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி