இரண்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய புதிய பைக்கை பொங்கலுக்கு ட்ரைல் பார்க்க ஓட்டி சென்ற பைக் ரேஸர் சாலை விபத்தில் பலியானது பெருத்த சோதனையை உண்டாக்கியுள்ளது. உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள வெள்ளைத்திடல் பகுதியை சேர்ந்தவர் இளவரசன். அவர் தஞ்சை, திருவாரூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் பைக் ரேஸராக இருந்துவருகிறார். அதிவேகமாக பைக் ஓட்டுவதில் வல்லவராக இருந்த இளவரசன் சாதாரணமாகவே சாலையில் செல்லும் பொழுதே அதிவேகமாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அதிவேகமாக செல்லக்கூடிய இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியிருக்கிறார். அந்த இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு அவரது நண்பர் உதயகுமார் என்பவரோடு கீழ்வேளூரில் இருந்து திருவாரூர் அதிவேகமாக சென்றிருக்கிறார். அப்போது சந்தைதோப்பு என்கிற இடத்தில் திருச்சியில் இருந்து நாகூர் தர்ஹா வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானார்.
அந்த கோரவிபத்தில் படுகாயமடைந்த இளவரசனும் உதையகுமாரும் திருவாரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலத்தகாயத்தோடு கவலைக்கிடமான இளவரசன் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து விசாரணை நடத்திய கீழ்வேளூர் போலீசார் எதிரே வந்த காரை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் புகாரை பெற்று திருவாரூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளவரசன் பைக் ஓட்டியபோது குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதைக்கேட்டு கோபமான இளவரசனின் உறவினர்கள் காரை ஓட்டி வந்த இஸ்மாயில் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென நாகை திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழ்வேளூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உதயகுமார் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டுமென உயிரிழந்த இளவரசனின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகை டிஎஸ்பி முருகவேல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால், ஆத்திரம் அடைந்த டிஎஸ்பி போராட்ட காரர்களிடம் கடும் ஆவேசத்துடன். "காவல்துறையின் விதிகளை நீங்கள் மதிப்பதில்லை, ஹெல்மட் போடுங்க, குடிக்காதீங்க, வேகமா போகாதீங்க என்று போலீஸ் சொன்னால் எவன் கேட்கிறீங்க," என்று ஆவேசத்துடன் அட்வைஸ் செய்தார். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி உறுதி அளித்தபிறகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர்.