
கொள்ளிடத்தில் ஏற்படுத்திய வெள்ளத்தினால் சேதமடைந்த திட்டுபடுகை அரசு உயர்நிலைப்பள்ளியை சீரமைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்களும் அப்பகுதிமக்களும் கோரிக்கையாக வைக்கின்றனர்.
நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களுல் ஒன்று திட்டுபடுகை. அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 106 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளியாக இருந்து, பிறகு 2006 ல் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி கடந்த 4 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றப்பள்ளியாக திகழ்ந்துவருகிறது.
தென்மேற்கு பருவமழையின் காரனமாக கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி காவிரி மூலம் வெள்ளம் பெருக்கெடுத்தது. வெள்ளத்தில் இருந்து மீள்வதற்காக தினசரி 3 லட்சம் கன அடி தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட்டனர். அதில் ஏற்பட்ட வெள்ள நீர் திட்டுப்படுகை பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த 5-க்கும் மேற்பட்ட கணினிகள், பிரிண்டர்கள், மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்த பயன்படுத்தி வந்த தொலைக்காட்சிப் பெட்டி, மாணவர்களின் சீருடைகள், புத்தகங்கள், பள்ளி ஆவணங்கள் உள்ளிட்ட கல்வி உபகரண பொருள்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
அதோடு பள்ளியின் கட்டிடசுவரும் மாணவ, மாணவியர்
களின் கழிவரைகளும் இடிந்து சேதமாகியுள்ளது. குடிநீருக்கு பயன்படுத்திய இரண்டு மின்மோட்டார்கள், மின்இணைப்புகளும் சேதமடைந்துவிட்டது. வகுப்பறை தரைதளம் முழுவதும் சேறும், சகதியுமானநிலமையிலேயே பள்ளிக்கூடம் நடந்துவருகிறது.
"பள்ளி பாதுகாப்பற்ற நிலையிலும், ஈரமாகவும் இருப்பதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். ஆகையினால், இப்பள்ளியை மீண்டும் சிறப்பாக செயல்படும் வகையில் வெள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமும், மேடுமாக உள்ள பள்ளி வளாகத்தை உடனே சீரமைத்து தரவேண்டும். புதிய வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டும் வரை, தற்போதுள்ள பள்ளி கட்டடங்களை சீரமைத்து தரவேண்டும், சேதமடைந்த கணினிகள், மின்மோட்டார்கள், மின் இணைப்பு பாதைகள் உடனடியாக சீரமைக்கவேண்டும், புதிய கழிவறைகள் மாணவ-மாணவிகளுக்கு தனி, தனியாக கட்டிகொடுக்க வேண்டும், சேதமைடந்த இருக்கைகள், தளவாட பொருள்களை புதிதாக வாங்கிக்கொடுக்க வேண்டும், தரைதளம் புதிதாக அமைக்க வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திக்காட்டிய இப்பள்ளியை உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என்கிறார் அந்தபள்ளியின் ஆசிரியர் ஒருவர்.