திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது 9 வயது மகள் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடம் அருகே பாதி உடல் எரிந்த நிலையில் சிறுமி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த மர்ம மரணம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
அதைத் தொடர்ந்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி தலைமையிலான தனிப்படையினர், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள், பெற்றோர், உறவினர்கள் என அனைவரிடமும் விசாரித்தனர். ஆனாலும் இதுவரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதேசமயம், மன்னவனூர், கொடைக்கானல் உட்பட மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் மாணவிக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பெற்றோருடன் மக்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (24.12.21) இந்த விவகாரம் குறித்து திண்டுக்கலில் பாமக சார்பில் கல்லறைத்தோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவியைப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கண்டன குரல் எழுப்பியதுடன், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளர் ஜோதிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் மாவட்டச் செயலாளர்கள் சிவக்குமார், ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள், வேலூர் மாநில மகளிர் சங்கத் தலைவர் நிர்மலா ராஜன், கடலூர் மாநில மகளிர் அணிச் செயலாளர் சிலம்பு செல்வி உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இப்படி தொடர்ந்து மலைக் கிராம மாணவிக்கு நீதி கிடைக்கக் கோரி அரசியல் கட்சியினரும், பொது மக்களும் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாற்றியதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி. சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சாந்தலட்சுமி ஆகியோர் திண்டுக்கல்லில் உள்ள எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து மாணவி குறித்து விசாரணை செய்த அனைத்து ஆவணங்களையும் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கூடிய விரைவில் அதிரடி விசாரணையும் நடக்க இருக்கிறது.