நாடாளுமன்ற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவினர் நேற்று 2வது நாளாக மதுரையில் ஆய்வு செய்தனர். அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கப்படும் காலை உணவை சாப்பிட்ட உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் தமிழக முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக திமுக எம். பி கனிமொழி பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தலைமையில் மக்களவை உறுப்பினர்கள் 21 எம்.பி.க்களும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 எம்.பி.க்களும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, கனிமொழி தலைமையில், எம்.பி.க்கள் ஏ.கெ.பி.சின்ராஜ், ராஜ்வீர்டிலர், நரேந்திர குமார், தாளரிரெங்கையா, அப்துல்லா, கீதாபென்வாஜெசிங் பாய்ரத்வா, ஷியாம் சிங் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மதுரையில் உள்ள ஊர்களை ஆய்வு செய்தனர்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும், அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ குறித்து மதுரையில் உள்ள சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவைப் பரிமாறினர். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் தொகுதி எம்.பி.யும், பகுஜன் சமாஜ் கட்சியின் மக்களவை கட்சித் தலைவருமான ஷியாம் சிங், காலை உணவைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
அதற்கேற்ப, ஷியாம் சிங் உள்ளிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. அதன் பின்னர், உணவைச் சாப்பிட்ட எம்.பி.க்கள் காலை உணவு திட்டம் சிறப்பான திட்டம் என்று கூறினர். எம்.பி ஷியாம் சிங், கல்வி பயிலும் மாணவர்களின் அக்கறை கொண்டு இந்த காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். அதன் பின்னர், நெல்பேட்டை பகுதியில் உள்ள காலை உணவு சமையல் கூடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.