ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை ஏஜென்சியனர் அடித்து சித்ரவதை செய்து அவரை இந்தியாவிற்க்கு வர முடியாதபடி கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதால் தனது தாயை மீட்டு தரக்கோரி மகன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அம்மன்குளத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி சாமுண்டீஸ்வரி (43). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அஸ்லாம்கான் என்பவரின் மூலம் டூரிஸ்ட் விசாவில் வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்க்கு சென்றுள்ளார். மேலும் அஸ்லாம்கான் சாமுண்டீஸ்வரியை வேலைக்கு அனுப்ப ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியிடம் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.
இந்தநிலையில் ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியினர் தன்னை அடித்து கொடுமைபடுத்துவதாக தனது மகன் விக்னேஸிடம் சாமுண்டீஸ்வரி அழைபேசியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனால் தனது தாயாரை ஓமன் நாட்டில் இருந்து மீட்டு தருமாறு அவரது மகன் விக்னேஷ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து உறவினர் சித்ரா கூறியதாவது, என் அத்தையை வீட்டு வேலைக்காக அழைத்து சென்ற ஏஜென்சியினர் உணவு கொடுக்காமல், அடித்து சித்ரவதைப்படுத்தி வருகின்றனர். அதேபோல அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து வைத்துள்ளனர். இதனால் அவரின் நிலைமை கேள்விகுறியாக உள்ளது. ஆகவே அவரை உடனடியாக ஓமனில் இருந்து மீட்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.