புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண் சக்திகுமார் பதவியேற்ற நாளில் இருந்து மாவட்ட அளவில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். சிறிய ஓய்வு நேரங்களை குடும்பத்தினருடன் செலவு செய்யுங்கள் என்று காவலர்களை குடும்ப உறுப்பினர்களை பார்க்க அனுப்பினார். டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை கடந்து மது விற்பனைக்கு தடை, ஏழைகளை வதைத்த லாட்டரிச் சீட்டுகளுக்கு தடை, மணல் திருட்டு முடக்கம் என்று பல்வேறு அதிரடிகளை செய்து மாவட்ட மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். காலை நேரங்களில் வாக்கிங் என்ற பெயரில் ஒரு நாளைக்கு ஒரு பகுதியாக தினமும் 3 கி மீ வரை நகர்வலம். குற்றச் செயல்கள் நடக்கும் பகுதிக்கு நகர் வலம் சென்று வருவதால் அடியோடு மறைந்தது.
![Mosquito bat - police - sp -](http://image.nakkheeran.in/cdn/farfuture/WSnxkOBf4YFJtWcfppMAjevtsDgDqhiZCKKQCX34l6Q/1580446520/sites/default/files/inline-images/550_2.jpg)
இந்தநிலையில் தான் இரவில் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றி வந்தவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களில் இரவு நேர பணியில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அந்தந்த பகுதியில் பணியில் இருக்கும்போது கொசு தொல்லையால் அதிகம் அவதிப்பட்டு வந்தனர்.
இரவு காவலில் கண்விழ்த்திருப்பவர்களுக்கு கொசுக்கடி பெரிய சவாலாக இருப்பதை நேரில் பார்த்து உணர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், தனது சொந்த செலவில் ரூபாய் 800 மதிப்புள்ள 50 எலெக்ட்ரானிக் கொசு பேட்களை வாங்கித் இரவு காவலுக்குச் செல்லும் காவலர்களுக்கு வழங்கியுள்ளார்.
எங்களின் மனநிலையை அறிந்து கொசுக்கடியால் அவதிப்படுவதைப் பார்த்து மனிதநேயத்தோடு எஸ்.பி. கொசு பேட் சொந்த பணம் ரூ 40 ஆயிரம் செலவு செய்து வாங்கி கொடுத்திருக்கிறார். இதனால் இரவு பணியில் உள்ள காவலர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றனர் நெகிழ்ச்சியோடு.
ஒவ்வொரு உயர் அதிகாரியும் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் நிலையை உணர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக உள்ளது.