சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சென்னை அடையாறு மருத்துவமனை தலைவர் சாந்தா, அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (19 ஜன.) காலை காலமானார். தொடர்ந்து அவரது உடல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் மருத்துவர் சாந்தா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அடையாறு மருத்துவமனையிலிருந்து மருத்துவர் சாந்தாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு அறிவித்தபடி 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதைக்குப் பிறகு மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.