Skip to main content

'தானாக விடியும் என்று தவறாக நம்பாதே'- ஆதவ் அர்ஜுனா பதிவு

Published on 09/12/2024 | Edited on 09/12/2024
vck

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6 ஆம் தேதி (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வி.சி.க. துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது  தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும்  தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு ‘தவறான முன்மாதிரியாக’ அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்” எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா நீண்ட பதிவு ஒன்றை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 

 

'ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!

'அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.

தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.

vck

தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற  முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத்  தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில்  அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.

கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில்  உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து  ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்.

ஆயிரம் கைகள் மறைத்தாலும்…
ஆதவ(ன்) மறைவதில்லை!' என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் 'தானாக விடியும் என்று தவறாக நம்பாதே; வீணாக மனம் நொந்து எல்லாம் விதியென்று வெம்பாதே; நீயாக முன்வந்து நெருப்பாக விழிசி வந்து நிலையாக போரிட்டால் நிச்சயமாய் விடியல் உண்டு உனக்கு' என்ற திருமாவளவனின் வரிகளையும் பதிவிட்டுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்