தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து அண்மையில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிவரும் பரந்தூர் மக்களை சந்தித்திருந்தார். அதேநேரம் மாவட்ட பொறுப்பாளர்களை அமைப்பதற்கான பணியிலும் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தவெகவில் மாவட்ட அளவிலான பொறுப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு பணம் வசூலிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருந்தது. குறிப்பாக விழுப்புரம் நகரத்தலைவர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தால் பதவி கிடைக்கும் என்பதை போன்ற வாட்ஸ் அப் குரூப் உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 'யாராக இருந்தாலும் சரி தெளிவாக சொல்கிறேன் பதவிக்கு யாராவது பணம் வாங்கினார்கள் என்று சொன்னால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.