முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கண்ணியத்தின் உருவமாய் வாழ்ந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுற்ற செய்தி மனத்தை கலங்கச் செய்தது. இந்திய நாட்டின் 14 வது பிரதமராக பதவி ஏற்ற டாக்டர் மன்மோகன் சிங் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்திலிருந்து வந்த முதல் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டத்தை பெற்று, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி உலகம் போற்றும் பொருளாதார மேதையாகத் திகழ்ந்த டாக்டர் மன்மோகன் சிங் பி.வி நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தார். இவர் காலத்தில் எடுக்கப்பட்ட பல பொருளாதார முடிவுகள் இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மிக உறுதியாக நின்ற டாக்டர் மன்மோகன் சிங் நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல மிகுந்த முயற்சிகளை முன்னெடுத்தவர். இரண்டு முறை பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இந்தியா போற்றும் பல திட்டங்களை தனது ஆட்சி காலத்தில் கொண்டு வந்தவர். அவற்றில் குறிப்பிடத்தக்கது தகவல் அறியும் உரிமைச் சட்டம், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவை ஆகும். இவை இந்தியா பெற்ற சுதந்திரத்தை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்தது என்றால் மிகையில்லை.
மாண்பு நிறைந்த திட்டங்களின் மூலம் மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுத்த டாக்டர் மன்மோகன் சிங் இப்போது இல்லையே என்று ஏங்கும் வகையில் இன்றைய ஒன்றிய ஆட்சியின் அலங்கோலங்கள் அமைந்திருக்கின்றன. 2004 டிசம்பர் 6 அன்று டெல்லியில் பாபரி பள்ளிவாசல் இடிப்பிற்கு நீதிக் கேட்டு எனது தலைமையில் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தனோம். போராட்டம் நடத்தி கலையும் நேரத்தில் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. மாலை 5 மணியளவில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். சுமார் அரை மணி நேரம் எங்களுடன் உரையாடினார். பாபரி மஸ்ஜித் இடிப்பு மிகவும் வேதனையான நிகழ்வு என்று குறிப்பிட்டார்.
பள்ளிவாசலை இழந்தோம், ஆனால் அதனை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என நமது வேதனையை வெளிப்படுத்தினோம். கவலைப்படாதீர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். நமக்கு அளித்த வாக்குறிதியை நிறைவேற்றும் வகையில் வாஜ்பாய் காலத்தில் நீர்த்து போக வைக்கப்பட்ட பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கை உயிர்ப்பித்து அத்வானி, முரளிமனோகர் ஜோசி, உமாபாரதி உள்ளிட்டோரை குற்றவாளி கூண்டில் நிறுத்திய முதுகெழும்பு உள்ள பிரதமராக மன்மோகன் சிங் விளங்கினார் என்பது வரலாறாகும். 2014ல் மோடி பிரதமர் பொறுப்பேற்ற பிறகே இந்த வழக்கு நீர்த்து போனது.
விடுதலைப் பெற்ற இந்தியாவில் முதன் முறையாக முஸ்லிம்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் உயர் நிலை குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை வெளியிடப்படுவதற்கும் வழிவகுத்தவர் மன்மோகன் சிங். இதே போல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மதவழி மற்றும் மொழிவழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஒன்றிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதும் மன்மோகன் சிங் ஆட்சியில் தான்.
சுனாமி என்னும் ஆழிப் பேரலை இந்தியாவை உலுக்கிய டிசம்பர் 26 ஆம் நாளில் மன்மோகன் சிங் மறைந்திருக்கிறார்கள். டிச.26. 2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை அடித்த போது தமிழ்நாடே சீர்குலைந்து போனது. அந்நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆற்றிய பணிகளை குமரி மாவட்டத்தில் நேரில் கண்ட டாக்டர் மன்மோகன் சிங் தமுமுகவின் தன்னலமற்ற தொண்டுகளை நெகிழ்ந்து பாராட்டியது நினைவுகூரத்தக்கது. டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் காங்கிரஸ் கட்சியின் தோழர்களுக்கும் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.