Skip to main content

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவின் பெயர் சட்டமன்ற இணையதளத்தில் இருப்பது சட்டவிரோதமானது - ஸ்டாலின்

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
P-Balakrishna-Reddy



தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் பெயர் தமிழக சட்டமன்ற இணையதளத்தில் இடம்பெற்றிருப்பது சட்டவிரோதமானது. பேரவைத் தலைவர் உடனே இதனை நீக்குவதோடு அவரின் தகுதி நீக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை 21- ஆக மாற்றி அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில், மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயர் தமிழ்நாடு சட்டமன்ற இணையதளத்தின் “சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர்ப்  பட்டியலில்” இன்னும் தொடர்ந்து படத்துடன் இடம்பெற்றிருப்பதற்குக்  கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில், தான் “குற்றவாளி என்று நிரூபணம் செய்யப்பட்டதற்கும்” (Conviction), அந்த நிரூபணமான குற்றத்திற்கு விதிக்கப்பட்ட “சிறை தண்டனைக்கும்” (Sentence) தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் திரு பாலகிருஷ்ண ரெட்டி செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
 

“மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி சிறை தண்டனை பெற்று, தகுதி நீக்கத்திற்குள்ளான சட்டமன்ற உறுப்பினர் மேல்முறையீடு செய்திருந்தாலும், உடனடியாக தகுதி நீக்கம் அமலுக்கு வரும்” என்று உச்சநீதிமன்றமே ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்னும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயர் சட்டமன்ற இணைய தளத்திலிருந்து நீக்கப்படாமல், முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஆட்சியில் மக்களாட்சித்  தத்துவமும், சட்டமன்ற ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்டுள்ளது. 
 

எவ்வித பாரபட்சமும் இன்றி- கட்சி சார்பற்ற முறையில் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே செயல்பட வேண்டிய பேரவைத் தலைவர், பாலகிருஷ்ண ரெட்டியை தேர்ந்தெடுத்த ஓசூர் தொகுதி காலியானதாகக் கூட இன்னும் அறிவிக்காமல் தாமதம் செய்கிறார். அதனால் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் “காலியிடங்கள்” 21 என்பதற்கு பதிலாக, இன்னும் 20 இடங்கள் என்றே தொடர்ந்து நீடிக்கும் அவலம் உருவாகியிருக்கிறது. 
 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திற்கு உள்ளாகும் நேரங்களில் – அது ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரமாக இருந்தாலும், தற்போது பாலகிருஷ்ண ரெட்டி தகுதி நீக்கமாக இருந்தாலும் பேரவைத் தலைவர் சட்ட நெறிகளையும், ஜனநாயக நெறிகளையும் காலில் போட்டு மிதிப்பது மிகவும் வேதனைக்குரியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் பெயர் இணைய தளத்தில் இடம்பெற்றிருப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல- தமிழக சட்டமன்றத்தின் புனிதத்தன்மைக்கும், மாண்பிற்கும்  களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  
 

ஆகவே, சட்டமன்ற ஜனநாயகத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பேரவைத் தலைவரே இதுமாதிரி அரசியல் சட்டத்தையும், மக்கள் பிரநிதித்துவச் சட்டத்தையும் அவமதிக்கும் செயலில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டு, பாலகிருஷ்ண ரெட்டியின் பெயரை சட்டமன்ற இணைய தளத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அவரின் தகுதி நீக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக அறிவித்து தமிழக சட்டமன்றத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை 21- ஆக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்