
மத்திய அரசின் உயர் பதவிகளான இணைச் செயலர்கள், இயக்குநர்கள், துணை செயலாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டிருந்தது. பொதுவாக, இந்த பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியமர்த்துவதுதான் வழக்கம். ஆனால் தற்போது அந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் நடத்தினால், தற்போது ஐ.ஏ.எஸ் முடித்துவிட்டு அதிகாரிகளாக வேலை பார்த்துவருபவர்கள் பிறகாலத்தில் மத்திய அரசின் உயர்பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு பறிக்கப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ராகுல்காந்தி உள்பட நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் அறிவிப்பு சமூக நீதி மீது தொடுக்கப்படும் நேரடி தாக்குதல் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சமூகநீதியை நிலைநாட்டவும். இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும்.
மத்திய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும். தகுதிமிக்க பட்டியல், பழங்குடி இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும். மத்திய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி. எஸ்.சி - எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்.
தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற 'கிரீமி லேயர்' முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கிரீமி லேயருக்கான வருமான உச்சவரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.