திருப்பூர் மாவட்டம் மணியக்காரம் பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பிரபல பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று (21.12.2024) திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது நிறுவனத்தில் உள்ள பிற பகுதியிலும் பரவி உள்ளது.
இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களையும் காவல்துறை வெளியேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. திருப்பூரில் பிரபல பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.