Skip to main content

நியாய விலை கடைக்கு நேரடியாக சென்று கரோனா நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர்கள்..!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

The ministers who went directly to the ration shop and gave the corona relief amount

 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவருடைய தொகுதிக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைகளில் நேரடியாக பொதுமக்கள் முன்னிலையில் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார்.

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள கடையின் ஒன்றில் உதவித் தொகையை வழங்கிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இரண்டாவது தவணையும் முழுமையாக வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், “பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வு நிச்சயம் நடைபெறும். இதுகுறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கருத்துக் கேட்பு நடைபெற்றுவருகிறது.

 

அனைவருமே 12ஆம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துவருகின்றனர். இன்றைய மனநிலையில் தேர்வு என்பது அவசியம் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த நோய் தாக்கத்தின் விளைவு இனிவரும் காலங்களில் எப்படி இருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் நிச்சயம் 12ஆம் வகுப்புக்கான தேர்வு நடைபெறுவதில் உறுதியாக இருக்கிறோம். ஏனென்றால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிக்குள் நுழையும்போது மாணவ மாணவிகள் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது மிக முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. 

 

இங்கு தேர்ச்சிபெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒருவேளை அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பு அரசு கொடுத்தால், மாணவர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்ச்சியைத் தந்து அரசைப் பாராட்டலாம். ஆனால் அது எங்களுக்குத் தேவை இல்லை. தேர்வு நடத்தி அதன்மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்