
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான ஒருங்கிணைப்பு குழு தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் இது தொடர்பாக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கோவை முதலாவது குற்றவியல் நிதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் என்னைப் பற்றி அவதூறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் அடுத்த 10 பத்து நாட்களில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில் கே.சி.பழனிசாமி தரப்பில், வீடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதி வர உள்ளது. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி ஆஜராக வேண்டும் எனச் சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.