Skip to main content

“வீண் அரசியலைத் தவிர்க்கவும்”  - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

Published on 23/08/2024 | Edited on 24/08/2024
Minister tRb raja says Avoid futile politics

தமிழக அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரம்180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 21 ஆம் தேதி (21.08.2024) “தமிழ்நாடு முதலீட்டு மாநாடு- 2024” நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது முடிவுற்ற திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை விவாதத்தின் போதே கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ள தொழில் முதலீடுகள், தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள், அதன் மூலம் கிடைத்த வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் மூலமாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Minister tRb raja says Avoid futile politics

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 16 சிப்காட் பூங்காக்கள் உருவாக்கப்பட்டிருப்பதுடன் புதிதாக 21 சிப்காட் பூங்காக்கள் அமையவிருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 31 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில்  அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட 68 ஆயிரத்து 773 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் தொடர்ச்சியாக டாபர் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்க இருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஏறத்தாழ 7 மாத இடைவெளியிலேயே இந்தளவுக்குத் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது என்பது தமிழ்நாடு முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலமாக இருப்பதையும், வெளிநாட்டு, வெளிமாநிலங்களின் புகழ் பெற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டை நாடி வரும் வகையிலானக் கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு உருவாக்கியுள்ளது என்பதையும் நிரூபித்திருக்கிறது.

Minister tRb raja says Avoid futile politics

தொழில்துறையில் தமிழ்நாட்டின் பொற்காலமாக விளங்கும் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களுக்குமான பாரபட்சமற்ற வாய்ப்புகளை முதலீடுகள் மூலமாக உருவாக்கி வரும் நிலையில் இது பற்றி அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவிப்பவர்கள் நிறையக் கவனத்துடன் வார்த்தைகளைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும். உங்களால் புதிய முதலீடுகளையோ, புதிய தொழிலையோ கொண்டுவர முடியாவிட்டாலும், தமிழ்நாட்டை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற முதலீடுகளுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையிலான வீண் அரசியலைத் தவிர்க்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்