பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 22ஆம் தேதி வியாழக்கிழமை தனது தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் தொடக்க விழாக்களில் கலந்து கொண்டார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 426 மையங்களில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 303 மாணவர்கள் நிச்சயம் மருத்துவ படிப்பு படிக்க முடியும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.
குடி மராமத்து பணிகளால் இப்போது தமிழகம் முழுக்க ஏரி, குளங்கள் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. விவசாயத்திற்கோ குடிநீருக்கோ நமது முதல்வர் ஆட்சியில் பஞ்சமே இல்லை. நமது முதல்வர் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மிகவும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.” என்று கூறினார்.