தமிழர் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் சிலம்ப விளையாட்டை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் தற்போது வெளிப்பட்டு வருகின்றன. அழிந்துபோகும் நிலையில் இருந்த இந்த வீரக்கலைக்கு புத்துயிர் ஊட்டும் விதத்தில், நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் சிலம்பப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். அப்படித்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் வியட்நாமில் நடந்த தெற்காசிய அளவிலான சிலம்ப போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சிலம்ப வீரர்களான பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்று தங்கம் வென்றனர்.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, மலேசியாவில் நடைபெறவிருக்கும் உலக சிலம்பப் போட்டிக்கு சிவகாசியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 9 பேர் தகுதி பெற்றனர். இவர்கள், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி மலேசியா கிளம்பி, அங்கு 7 நாட்கள் வரை தங்கியிருந்து உலக சிலம்ப போட்டியில் பங்கேற்று, 7-ஆம் தேதி இந்தியா திரும்ப வேண்டும். அதற்கான பயணச்செலவு முழுவதையும் அந்த மாணவர்களே செலுத்த வேண்டும் என்று இந்திய சிலம்பம் கூட்டமைப்பு தெரிவித்துவிட்டது.
போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றவர்களாக இருந்தாலும், வெளிநாடு செல்லும் அளவுக்கு பொருளாதார வசதி உள்ளவர்களாக அந்த மாணவர்கள் இல்லை. காரணம், அவர்கள் அனைவரும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள். இவர்களின் பரிதவிப்பு, சிவகாசி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர்களை அழைத்த அமைச்சர், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் நிதிஉதவி வழங்கி, வெற்றியுடன் தாயகம் திரும்புவதற்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.
தகுதி இருந்தும், அதனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைந்தும், பொருளாதார வசதியின்மை காரணமாகத் தவிக்கும் நிலையில் உள்ளவர்களை அடையாளம் கண்டு, நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அவர்களின் திறமை வெளிப்படுவதற்கு, செல்வாக்கு படைத்தவர்கள் உதவ முன்வருவது, ஆறுதலும் ஊக்கமும் அளிக்கும் நற்செயல் ஆகும்.