காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளியின் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் தூக்கிட்டநிலையில் புதனன்று இறந்துகிடந்தார். அதனை தொடர்ந்து மாணவியின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் தேன்தொழி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட கட்சியினர் கிராம பொதுமக்களுடன் வியாழக்கிழமை சம்பந்தபட்ட பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுதேவன், சத்துணவு பொறுப்பாளர் விக்டர் ஆகிய இருவரும் முன்னுக்கு பின் தகவல்களை கூறியுள்ளனர்.
பின்னர் மாணவி சாவில் இவர்களுக்கு தொடர்பு இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உடற்கூறு ஆய்வு முடித்து வந்த மாணவியின் உடலை வைத்துக்கொண்டு மெய்யாத்தூர் கிராமபொதுமக்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் காட்டுமன்னார்கோவில் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தவர்த்தாம்பட்டு என்ற இடத்தில் சாலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு மணி நேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் போராட்டத்தால் ஆத்திரம் அடைந்த சேத்தியதோப்பு காவல்துறை துணைகண்காணிப்பாளர் ஜவகர்லால்நேரு தலைமையிலான காவல்துறையினர் போராட்டகார்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் தடியடி நடத்தினார்.
இதனால் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் முதியவர்கள் செய்வதறியாது சிதறி ஓடினர். இதில் சிலபேர் கிழே விழுந்ததால் லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட அந்த கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து குமராட்சி காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.