விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறை கிராமத்தில், கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அதாவது அரசுக்கு 28.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தற்போது அமைச்சராக உள்ள பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது 2012ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத 13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 81 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வங்கிக் கணக்கிலிருந்து 41 கோடி ரூபாய் பணமும் அமலாக்கத்துறையில் முடக்கப்பட்டது. இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடிக்கு மூன்று முறை சம்மன் அனுப்பி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவானியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். மேலும் பொன்முடியின் 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கப்பட்டன.
அதோடு கௌதாசிகாமணியின் உறவினரான கே.எஸ். ராஜா மற்றும் மகேந்திரனின் 5 கோடியே 74 லட்ச ரூபாய் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதாக அமைச்சர் பொன்முடிக்கு கடந்து சில தினங்களுக்கு முன்பாக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவானியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி இன்று (17.12.2024) ஆஜராகி உள்ளார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.