சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், தனது ஹோட்டலில் பணிபுரிபவரின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும் என ஜோதிடர்கள் கூறியதால் ஜீவஜோதியை திருமணம் செய்துகொள்ள நினைத்தார் ராஜகோபால். ஆனால் ஜீவஜோதி வேறொருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் கூலிப்படை ஆட்களை வைத்து ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்தார்.
![saravanabhavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/l6Dd1VSiI8pif0FnirGcyH07BfNyNZfsI4ehoah0uDE/1562563210/sites/default/files/inline-images/saravanabhavan_0.jpg)
இதைத்தொடர்ந்து கடத்தியவர்களில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார், குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதைத்தொடர்ந்து 10 ஆண்டுகள் விசாரணை நடந்தது. இறுதியில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வலியுறுத்தியது.
ஜூலை 7ம் தேதிக்குள் சரணடையவும் கெடுவிதித்தது. நேற்றோடு கெடு முடிந்தது. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் நீதிமன்றம் செயல்படவில்லை. அதனால் இன்று அவர் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருப்பதாகவும் அதனால் சரணடைய இயலாது என்றும் கூறுகின்றனர்.