Skip to main content

மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்த அமைச்சர் மெய்யநாதன்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

Minister Meiyanathan met the Union Minister and submitted the petition

 

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் பல்வேறு தென்னை நார் தொழில் உற்பத்தி சங்கங்கள், கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கடந்த 8 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் தென்னை நார் தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவற்றின் தீர்வுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தற்போதைய நிலையில் இத்தொழிற்சாலைகள் வெள்ளை வகைப்பாட்டில்தான் தொடர்கிறது என தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் ஜூலை 2023 இல் வெளியிடப்பட்ட மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தொழிற்சாலைகளுக்கான வரைவு வகைப்பாடு அறிவிக்கையின் மீது தென்னை நார் சங்கங்களும் முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தென்னை நார் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு தனது மனுவில், தென்னை நார் தொழில்களை ஆரஞ்சு என வகைப்படுத்துவதால், தென்னைநார் தொழில்களின் தற்போதைய சிரமங்கள் மற்றும் வீழ்ச்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தமிழகத்தில் சுமார் 4.44 லட்சம் ஹெக்டேர் தென்னை சாகுபடி நடைபெற்று வருவதாகவும், ஒரு ஹெக்டேர் 11,526 தேங்காய்கள் உற்பத்தித் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

மேலும், உற்பத்தி செயல்முறையில் பொதுவாக எந்த இரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதில்லை மற்றும் தென்னை நார் நனைக்கப் பயன்படுத்தப்படும், நீர் மீண்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது; அதனால் தொழிற் கழிவுநீர் ஏதும் வெளியேற்றப்படுவதில்லை. தென்னை நார் மற்றும் உமி ஆகியவை இயற்கையான சூரிய ஒளியின் உதவியுடன் முற்றத்தில் உலர்த்தப்படுகின்றன, மேலும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உலர்த்தும் முற்றத்தின் எல்லையில் தடுப்புடன் கூடிய செயல்முறையின் சுற்றுச்சுவர் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. தென்னை நார் தொழில்களை மறு வகைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் புதுடெல்லியில் இன்று (29.08.2023) மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் சந்தித்து தென்னை நார் தொழில்களை மறு வகைப்படுத்துவது தொடர்பான கோரிக்கை மனுவை வழங்கினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்