அரசு மருத்துவர் ஒருவர் பணிக்கு வராமல் ஏமாற்றியதை பட்டவர்த்தனமாக மேடையில் போட்டு உடைத்துள்ளார் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
நிகழ்ச்சி ஒன்றில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ''அண்மையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் நடந்தது. அப்பொழுது ஒரு மருத்துவர் மீது புகார்கள் எழுந்தது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை நிபுணராக உள்ள மருத்துவர் முனுசாமி. சேலத்தைச் சேர்ந்தவர். இவர் அடிக்கடி பணிக்கு வராமல் இருப்பதாகவும், ஆனால் அவருக்கான வருகைப் பதிவேட்டில் யாரோ அவருக்காக கையெழுத்து இடுகின்றனர் என்றும் புகார் வந்தது. இதுதொடர்பாக மருத்துவத்துறை செயலாளரிடம் கூறிய நிலையில் அவர் அங்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வில் பெரிய அதிர்ச்சி கிடைத்தது. அவர் பணிக்கு வராத நாளுக்கு அவரது வருகை பதிவேட்டில் சி.எல் லீவ் எடுப்பதாக எழுதிவிட்டு, பின்னர் இரண்டு நாட்கள் கழித்து CL- ஐ 'மு' எனத் தமிழில் அதாவது முனுசாமி என்பதாக மாற்றி விடுகிறார்கள். மருத்துவர்கள் இவ்வளவு கிரிமினல்களாக யோசிக்கக் கூடாது. மக்களின் உயிரைக் காக்கும் கடவுளைப் போன்றவர்கள் மருத்துவர்கள்.
பணிக்கு வராத காலத்தில் பணிக்கு வரவில்லை என்று ஒத்துக் கொண்டால் போதும். வேண்டாம் நான் தனியாக ப்ராக்டிஸ் செய்கிறேன் என்று சொன்னால் விட்டுவிட்டுப் போய்விடுங்கள். நாங்கள் கேட்க மாட்டோம். ஆனால் அரசு வேலையும் வேண்டும், பணிக்கும் வரமாட்டேன் என்றால் எப்படி. கோவை அரசு மருத்துவமனையில் முனுசாமி என்பவர் இதய சிகிச்சை நிபுணராக உள்ளார், அவரிடம் போனால் நமக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பி வரும் மக்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் இப்படி தில்லுமுல்லு செய்வது என்பது சரியான காரணம் அல்ல'' என்றார்.