அரசியல்வாதிகளின் வாரிசுகள், உறவினர்களுக்குத் தான் ஏ.பி.ஆர்.ஓ. எனப்படும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி.!! என ரூ.30 லட்சத்திற்கு கூவிக் கூவி விற்கப்படும் அந்தப் பதவிக்கு தகுதி திறமையிருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம் என தங்களது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர் நினைவு மணி மண்டபங்களில் நீண்ட நாட்களாக பொறுப்பாளர்களாகப் பணிபுரிபவர்கள்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களுக்கும், தமிழ் மற்றும் சமுதாயத் தொண்டு புரிந்தவர்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 80க்கும் அதிகமான நினைவு மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போழுது இதில் பொறுப்பாளர்களாகப் பணிபுரிபவர்கள் தங்களது உள்ளக்கிடக்கையை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து.,
" நினைவு மணிமண்டபங்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொழுது பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்து பராமரிக்கப்பட்டன. ஆனால் முதல்வர் மறைவுக்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. எல்லா மண்டபங்களிலும் வெண்கலத்தில் சிலைகள் உள்ளன. இதனை பாதுகாக்க போதிய பணியாளர்கள் இல்லை. அனைத்து மண்டபங்களிலும் ஒரு சில இடங்களில் ஆட்கள் நியமிக்கப்படாமல் இரவு நேர காவலர் இன்றி அனாதையாக சிலைகள் உள்ளன. வெளியிடங்களில் உள்ள தலைவர்களின் சிலையை பாதுகாக்க அரசு காட்டும் அக்கரையை மணிமண்டபங்களில் உள்ள சிலைகளை பாதுகாக்க வேண்டும். தியாகிகளுக்கென பல லட்சம் கோடிகளை கொட்டி மணிமண்டபங்களை கட்டும் அரசு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நிரந்தரமாக எந்த மண்டபத்திற்கும் துப்புறவு பணியாளர்கள் கிடையாது. மாறாக பகுதிநேர துப்புறவு பணியாளர்கள் ஒரு சிலர் வேலை பார்க்கின்றனர் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ5 வீதம் மாதம் ரூ 150 வழங்கி வருகிறது. இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா.? குறைந்த பட்சம் நாள் ஒன்றுகு ரூ100 வீதம் ரூ 3,000 வழங்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மின்சார கட்டணத்திற்கு மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் கட்ட அரசு கேள்வி கேட்பது இல்லை. துப்புறவு பணியாளர்களை மட்டும் இன்னும் அடிமை தொழிலாக பார்ப்பது சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். பொதுநூலகத்துறையில் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கு பணியாற்றும் நூலகர் 1 முதல் 3 பருவ பதவி உயர்வு உள்ளது. ஆனால் மண்டபங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு விடுமுறை கிடையாது. மயானத்தை பாதுகாப்பது போல் மண்டபங்களில் அடிமை தொழிலை மேற்கொள்ளும் ஊழியர்களை அரசு கண்டு கொள்வது இல்லை. வருவாய் துறையில் எஸ்.எஸ்.எல்.சி படித்தால் போதும் கோட்டாச்சியர் வரை பதவி உயர்வு உள்ளது. ஆனால் மணிமண்டபங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வழிகாட்டி காப்பாளர் வரை தான் பதவி உயர்வு இல்லை. சர்வீஸ் அடிப்படையில் காப்பாளர் 1 கிரேடு வரை பதவி உயர்வு நூலகத்துறை வழங்குவது போல் வழங்க அரசு முன்வர வேண்டும். 2008 வரை காப்பாளர்கள் மேற்படிப்பு படித்தால் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகலாம் அதையும் நிறுத்தி விட்டு நேரடி நியமனத்தில் அரசு இறங்கியதால் அதுவும் பறிபோனது. தற்போது ரூ.30 லட்சத்திற்கு தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்கின்றனர் அரசியல்வாதிகள்." என்கிற அந்த வாட்ஸ்அப் கடிதம் கூடுதலாக சில கோரிக்கைகளை வைத்துள்ளது.
"பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஒட்டு மொத்த மண்டபங்களை கவனிக்கும் ஒரு ஊழியரை சர்வீஸ் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கலாம். இப்படி பல்வேறு வழிகள் உள்ள நிலையில் மணிமண்டபங்களில் நாள்தோறும் விடுமுறை இன்றி உழைக்கும் ஊழியர்களின் நலனை அரசு கூர்ந்து கவணிக்காமல் மயானத்தை பாதுகாக்கும் ஊழியர்கள் போல் அரசு நடந்து கொள்வதை கை விடுதல் வேண்டும். இந்த துறையில் உள்ள மேல் அதிகாரிகள் பதவிமுதிர்வு அடைந்த பின்பும் மீண்டும் இதே துறையில் பல வருடங்களாக பதவி வகித்து வருகின்றனர். ஆனால் கீழ்மட்ட ஊழியர்களை கண்டுகொள்வதில்லை. இது விஷயத்தில் அரசு மணிமண்டபங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை அரசாணையாக வெளியிட வேண்டும். சர்வீஸ் அடிப்படையில் 10ம் வகுப்பு முதல் உயர் படிப்பு வரை படித்தவர்களுக்கு காப்பாளருக்கு அடுத்ததாக கிரேடு1, 2, 3 அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க அரசாணையில் வழிவகை செய்ய வேண்டும்" என்கின்றனர்.
மணிமண்டப ஊழியர்களை அரசு பாதுகாக்குமா?