ரபேல் மூலம் ஆதாயம் பெற்றதாலேயே மோடியால் இந்த விவகாரம் பற்றி பேச இயலவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, ரபேல் விமான கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசும் பிரதமர், ரபேல் பற்றி மட்டும் பேச மறுக்கிறார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் நான்கு கேள்விகள் கேட்டேன். ஆனால் அவரால் ஒன்றுக்குக் கூட பதிலளிக்க முடியவில்லை. பல்வேறு ஊர்களுக்குச் சென்று பிரதமர் பேசுகிறார். எந்த இடத்திலும் ரபேல் ஒப்பந்தம் பற்றியும், அனில் அம்பானி பற்றியும் ஒரு வார்த்தைக் கூட பிரதமர் பேசவில்லை.
ஏனென்றால் ரபேல் மூலம் ஆதாயம் பெற்றதாலேயே அவரால் இந்த விவகாரம் பற்றி பேச இயலவில்லை. ரபேல் ஊழல் மூலம் அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் பிரதமர் நரேந்திர மோடி தாரை வார்த்துவிட்டார். இவ்வாறு ராகுல் கூறினார்.