மாமல்லபுரம், தமிழகத்தின் புராதன நகரமாகும். இந்நகரத்தைஅழகுபடுத்தி பாதுகாப்பதற்காக எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து புகைப்பட ஆதாரங்களோடு அறிக்கை தாக்கல் செய்திட, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1-ஆம் தேதி, மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு கடிதம் அனுப்பி இருந்தார் நீதிபதி கிருபாகரன் .
அக்கடிதத்தில், ‘மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் லைட்டிங் ஷோவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
1. புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது..
2. மாமல்லபுரத்தில் குப்பை போடுவதைக் குற்றமாக்கி குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது அபராதம் வசூலிக்க வேண்டும்.
3. சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
4. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆங்கிலப் புலைமை பெற்ற காவல் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்
5. சுகாதாரமான உணவு, குடிநீர் வசதி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
6. மாமல்லபுரத்தை புராதன கிராமமாக அறிவித்து அகழ்வாய்வு பணிகளைத் தொடர வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்காக எடுத்துகொண்ட நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, ‘தமிழகத்தின் பெருமையாகக் கருதப்படும் மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியம்’என்று தெரிவித்தனர்.
மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாப்பதற்கு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள், ஒதுக்கப்படவுள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கையாக நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.