திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய மத நல்லிணக்க மாநாடு வேலூர் கோட்டை பூங்கா அருகே நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திராவிட நட்புக் கழக நிறுவனர் சுப. வீரபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சிங்கராயர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோரும் கருத்துரையாளர்களாக அனைத்து மதத்தைச் சார்ந்த மத குருமார்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், “வேலூரில் எது நடந்தாலும் அது வெற்றி பெறும். இந்திய விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்டு முதல் கொடியை ஏற்றியதும் இதே வேலூர் தான். பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததும் வேலூரில் தான். திராவிடர் கழகம் பிறந்ததும் வேலூரில் தான். ஏழு எம்எல்ஏக்கள் கிடைக்க வழி செய்ததும் வேலூர் தான்” என்றார். நேருவின் சுயசரிதை புத்தகத்தை மேடையில் படித்துக் காட்டிய துரைமுருகன், “திராவிடம் பற்றி மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘பண்பாடும் நாகரிகமும் பண்டைய இந்தியா’ என்ற கோசாம்பி என்பவர் எழுதிய புத்தகத்தில் நேருவின் கருத்துக்கு எதிர் கருத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் திராவிடர் என்ற வார்த்தையை இவர் புத்தகத்தில் குறிப்பிடவில்லை. தமிழர், தெலுங்கு உள்ளிட்ட அடையாளங்களையே மறைத்து பிஜேபி என்ற ஒன்றை மட்டும் நிலை நிறுத்துகிறார்கள். நமது அடையாளம் மறைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. இந்து மாதம் மட்டும்தான் இருக்கணும் அதிலும் சனாதனம் மட்டும் தான் இருக்க வேண்டும். அதிலும் பார்ப்பனர்கள் கொள்கையோடும் ஜாதியோடும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 11:00 மணி வரைக்கும் ஓட்டு போடுவது டல்லாக இருந்தது. காஷ்மீர் பிரச்சனை வெளிவந்த பிறகு மடமடவென ஓட்டை போட்டுவிட்டோம்.
ஒன்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் அடிபணிந்து விடுவார்கள்; ஆனால் இந்த பெரியார் மண் என்றைக்கும் அடிபணியாது. சிறுபான்மையினர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், வேறு யாராக இருந்தாலும் சரி என்றைக்கும் உங்கள் உடைமையை, உயிரைக் காப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். சுப. வீரபாண்டியன் நினைத்தால் எம்எல்ஏவுக்கு நிற்கலாம். ஆனால் அவருக்கு எந்த ஆசையும் இல்லை.” என்று பேசினார்.