
அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளராகவும், தமிழக அமைச்சராகவும் பதவி வகித்து வருபவர் துரைமுருகன் (வயது 86). இந்நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழக அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதே சமயம் அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை எஸ். ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இயற்கை வளத்துறையையும் (Natural Resources) கூடுதலாகக் கவனிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டது.