
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நேற்று நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமானது மட்டுமல்லாமல் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய இந்த தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு குழந்தைகள், பெண்கள் என 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எதிர்பாராதவிதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் பரபரப்பான சூழ்நிலையில், இன்று (08-05-25) டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, “பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் உறுதியான தகவல் இல்லை. எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை நாங்கள் பெரிதாக்க விரும்பவில்லை. பாகிஸ்தான் எதிர்வினையாற்றினால் நாங்களும் பின்வாங்க மாட்டோம்” என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ, “ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடைபெறும் நடவடிக்கை. எனவே தொழில்நுட்ப விளக்கத்தை அளிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்ற தலைவர்களிடம் தெரிவித்தார். நாடு தற்போது எதிர்கொள்ளும் பெரிய சவாலை உணர்ந்து, ஒவ்வொரு தலைவரும் பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்” எனத் தெரிவித்தார்.