சமூகத்தில் விளிம்புநிலை மனிதர் செய்கிற அசாத்தியமான காரியம், அம்மனிதனை அசாதாரண மனிதனாக மாற்றி விண்ணுக்கே கொண்டு போயிருக்கிறது. காலையில் முடிதிருத்தம் செய்ய சலூன் கடைக்குப் போனாலும் க்யூ. காத்திருக்க திராணியற்றுத் திரும்பினாலும் பாதிப்புத்தான். இந்தக் காத்திருப்புப் பளுவைக் குறைப்பதற்காகவே சலூன்களில் காலையில் விறைப்பாக வரும் தினசரிகள் பலரின் கைபட்டுப் பிறகு கந்தலாகி திசைக்கு ஒரு பிரதியாகப் போய்விடுவது நாம் காண்கிற சாதாரணமான நடைமுறைதான்.
ஆனால் அதையே சீர்திருத்தம் செய்து கடைக்கு வருகிற நபர்களின் டேஸ்ட்டிற்கு ஏற்ப வகையான புத்தகங்கள் அம்சமாக அடுக்கி வைக்கப்பட்டு அந்த சலூன்கடையே ஆழ்ந்த நூலகமாகவும், முடிதிருத்தும் இடமாகவும் டூ-இன்-ஒன் என மாற்றியிருக்கிறார் தூத்துக்குடியின் மில்லர் புரத்தின் முடிதிருத்தும் தொழிலாளியான 37 வயதுடைய பொன். மாரியப்பன்.
அவர் இந்த அளவுக்கு முன்னேற்றகரமாக மாற்றி யோசித்ததற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, பேச்சு வாக்கில் கிடைத்த தகவல், ஆரம்பத்தில் வக்கீல் குமாஸ்தாவாகப் பணியாற்றிய மாரியப்பனுக்கு தன் சூழ்நிலை காரணமாக அங்கே அவ்வளவாக அங்கீகாரம் கிடைக்காமல் போயிருக்கிறது. அனுவப்பட்ட அறிவால் வைராக்கியமான மாரியப்பன் தன் குலத் தொழிலுக்கே திரும்பினார்.
வக்கீல் அலுவலக அலமாரியைப் போன்று தன் சலூன் கடையில் வடிவமைத்தவர் சட்டப்புத்தகங்களுக்குப் பதிலாக வரலாறு, கலை இலக்கியம் சிறு கதைத் தொகுப்பு, ஆன்மீகம் என வகை வகையான புத்தகங்களை மனிதர்களின் ரசனைக் கேற்ப அதே நேரத்தில் வாசிக்கும் திறனையும் மேம்படுத்தியிருக்கிறார். சலூன் கடையில் தினசரிகள் இருந்தாலும் வருகிறவர்களின் கண் அலமாரியின் புத்தகங்களின் மீதே படிய, அவர்களின் காத்திருப்பு நேரமும் கரைகிறது முடிதிருத்தும் தொழிலும் நடக்கிறது. மெல்ல மெல்ல இந்த சலூன் கடை லைப்ரரி பரவி தற்போது மக்களின் பார்வையில் விரிந்துவிட்டது. பட்ட ஞானத்தின் வைராக்கியமே இதற்குக் காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார்.
சலூன் லைப்ரரி சமாச்சரம் மாவட்டம் தாண்டி அண்டையிலுள்ள நெல்லை வரை போக, அம்மாவட்ட நூலகம் மாரியப்பனை வரவழைத்துக் கௌரவித்திருக்கிறது. தற்போது விஷயம் பிரதமர் மோடி வரை போய் ”மன் கீ பாத்” நிகழ்ச்சியில் அவர், அந்த சாதாரண தொழிலாளி பொன். மாரியப்பனின் நூலகத்தைப் பாராட்டியவர் அதுபற்றிய சிந்தனை எப்படி வந்தது என்று கேட்டதுடன், பிடித்த புத்தகம் எது எனக் கேட்ட போது 8ம் வகுப்பைத்தாண்ட இயலாத மாரியப்பனோ, தனக்குப் பிடித்த புத்தகம் 'திருக்குறள்' என்றிருக்கிறார்.
பட்ட அனுபவமே மனிதனைப் பண்பாளனாக மாற்றுகிறது.