Skip to main content

'விவசாயிகளின்  மனங்கள் இரணமாகி கொண்டிருக்கிறது'-பாமக ராமதாஸ் வேதனை 

Published on 04/12/2022 | Edited on 04/12/2022

 

'The minds of the farmers are becoming dull'-Pmk Ramdas


தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வியர்வை சிந்தி சாகுபடி செய்த பயிர்கள் யாருக்கும் பயனின்றி அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டத்திலும், அதையொட்டிய தூத்துக்குடி மாவட்டத்திலும் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், வெண்டைக்காய் சாகுபடியில் தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக நெல்லை சந்தையில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.2 என்ற மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த உழவர்கள் சந்தைக்கு கொண்டு வந்த பல்லாயிரம் கிலோ வெண்டைக்காய்களை சாலையில் கொட்டி அழித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நன்கு விளைந்த வெண்டைக்காய்களை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் கால்நடைகளை மேய விட்டு அழிக்கின்றனர்.

 

அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்பட்ட தக்காளிக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த தக்காளியை கிலோ ஒரு ரூபாய்க்கு கூட கொள்முதல் செய்ய ஆளில்லை. அதனால் விளைந்த வயலிலேயே தக்காளி புதைந்து உரமாகிக் கொண்டிருக்கிறது; விளைவித்த விவசாயிகளின்  மனங்கள் இரணமாகிக் கொண்டிருக்கின்றன.

 

ஒரு ஏக்கரில் வெண்டைக்காய் சாகுபடி செய்வதற்கு சராசரியாக ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு அதிகபட்சமாக 6 டன்கள் வரை விளைச்சல் கிடைக்கும். வெண்டைக்காயை சந்தைக்கு கொண்டு செல்வதற்கும், மூட்டைகளை கையாள்வதற்கும் ஒரு கிலோவுக்கு ரூ. 2 வரை செலவாகும். அந்த வகையில் ஒரு கிலோ வெண்டைக்காய் 9 ரூபாய்க்கு விற்கப்பட்டால் தான் விவசாயிகள் நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும்; அதற்கும் கூடுதலாக விற்பனை செய்தால் தான் அவர்களுக்கு  லாபம் கிடைக்கும். ஆனால்,  ஒரு கிலோ வெண்டைக்காய் 2 ரூபாய்க்கு விற்கப்பட்டால் உழவர்களால் போக்குவரத்து செலவை கூட ஈடு செய்ய முடியாது. தக்காளி சாகுபடியிலும் இதே நிலைமை தான். அதனால் தான் உழவர்கள் தக்காளி, வெண்டைக்காயை அறுவடை செய்யாமல் விட்டு விடுகின்றனர்.

 

சந்தைகளில் காய்கறிகளின் விலைகள் வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவது இப்போது தான் புதிதாக நடக்கும் நிகழ்வல்ல. ஆண்டுக்கு ஒருமுறையோ, ஈராண்டுக்கு ஒருமுறையோ காய்கறி கொள்முதல் விலைகள் வீழ்ச்சியடைந்து உழவர்கள் நஷ்டமடைகின்றனர். ஆனால், விவசாயிகளின் இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு தமிழகத்தை ஆட்சி செய்த அரசுகள் முயற்சி செய்யவில்லை.

 

இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு காய்கறிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்குவது தான். அனைத்து காய்கறிகளுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம் தான் காய்கறிகளை பயிரிடும் உழவர்களுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய  ஆணையம்  அமைக்க வேண்டும்; அத்துடன்அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதற்கு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக உழவர்களுக்கு பயனளிக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.

 

அதே நேரத்தில் கேரள அரசு இத்திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது. கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20% லாபம் கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. கேரளம் செய்ததை தமிழகமும் செய்திருந்தால் உழவர்கள் விளைபொருட்களை சாலையில் கொட்ட வேண்டியிருந்திருக்காது. அத்துடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும்.

 

தமிழ்நாட்டில் வறட்சி, மழை, அதிக விளைச்சல், விளைச்சல் இல்லாமை என எந்த சிக்கலாக இருந்தாலும் பாதிக்கப்படும் ஒரே பிரிவினர் உழவர்கள் தான். அவர்களை அனைத்து பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. கொள்முதல் விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள் - பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம்  அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடுதலாக வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.