டாஸ்மாக் வருமானத்தால் தான் அரசாங்கமே நடக்கிறது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம் என்கிறார் ஒரு அமைச்சர். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் எல்லாம் கடைகளை மூடுகிறோம். இதுவரை 800 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம் என்கிறார் மற்றொரு தமிழக அமைச்சர். ஆனால், புதிய புதிய இடங்களில் எல்லாம் கடைகளை திறந்தபடி தான் உள்ளது அரசாங்கம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இடத்தின் உரிமையாளர்கள் கடையை காலி செய்யுங்கள் என்றால் செய்ய மறுத்துவிடுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் அப்படி காலி செய்யச் சொல்ல டாஸ்மாக் நிர்வாகம் கடையை காலி செய்யாமல் போக்குகாட்டியதால் கடுப்பாகி கடையை சுத்தி சுவர் எழுப்பி அதிரவைத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக இயங்கி வருகிறது டாஸ்மாக் மதுபான கடை. இந்த கடை செயல்படும் இடத்தின் உரிமையாளர் ஜெய்பிரபு, இராணுவ வீரராக உள்ளார். இவர் ஊருக்கு வரும்போதுயெல்லாம் தெரியாமல் கடையை வாடகைக்கு விட்டுவிட்டோம், இதனால் பல பிரச்சனைகள் வருகிறது. அதனால் கடையை காலி செய்யுங்கள் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடிதம் தந்துள்ளார்.
டாஸ்மாக் நிர்வாகமோ காலி செய்ய மறுத்துவிட்டது. டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள், வேறு இடம் பார்த்து போகவும் மறுத்துவிட்டனர். இதில் கோபமான இடத்தின் உரிமையாளர் ஜெய்பிரபு பொருத்தது போதுமென அந்த கடையை சுற்றி சுவர் எழுப்பி யாரும் உள்ளே போக முடியாதபடி செய்துவிட்டார். இது என் இடம் நான் எங்கே வேண்டுமானாலும் சுவர் கட்டுவேன் எனச்சொல்லிவிட்டார். இதற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர்.
இன்று செப்டம்பர் 2ந்தேதி காலை முதல் இடத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். கடையை காலி செய்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு என்றதால் என்ன செய்வது எனத்தெரியாமல் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.