அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டிற்கு 2423 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 100- க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் கற்பித்தல் பணி பாதிக்கப்படாமல் இருக்க, அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பு 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டிற்கு அரசு கலைக்கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 2,423 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படும் கவுரவ விரிவுரையாளர்கள், நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கப்படும் வரை அல்லது கல்வி ஆண்டின் இறுதி வரையிலோ பணியில் இருப்பார்கள்.
இவர்களுக்கு 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை (ஜூன் மாதம் நீங்கலாக) மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதற்காக 53.30 கோடி ரூபாய் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரும், யுஜிசி விதிகளின்படி நியமிக்கப்படுவர். தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பணிநியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.