சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ - ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
இந்த மாநாட்டில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிகழ்வில் செமி கண்டக்டர் கொள்கைகள் வெளியிடப்பட்டன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் தொழில் கருத்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பொதுவாக நான் வெளிநாடு செல்லும்போதுதான் கோட் சூட் அணிவது வழக்கம். ஆனால், இன்று அனைத்து வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்திருப்பதால், நான் கோட் சூட் அணிந்து இங்கு வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. ஆட்சி மீதான நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் மட்டுமே தமிழகத்தில் முதலீடுகள் குவிகின்றன. கடந்த 2021இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தொழிற்துறை வேகமாக பயணித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார கொள்கையில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழகம் முதன்மையாகத் திகழ்கிறது. கடந்த 2.5 ஆண்டுகளில் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என முதலீட்டாளர்களின் முதல் மாநிலம் என்ற சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பீயூஷ் கோயல், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பன்னாட்டு தூதரக அதிகாரிகள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஜப்பான் நாட்டின் கொச்சி மாகாண ஆளுநர் ஹமாதா செய்ஜி, இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஆர். தினேஷ், ஒலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பவிஷ் அகர்வால், கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் நிசாபா கோத்ரெஜ், டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண்ராய், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.