சேலம் அருகே, திமுக பிரமுகர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் திடீரென்று தலைமறைவான சம்பவம் மீண்டும் லகுவம்பட்டி அரசுப்பள்ளியை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் உமா (42). கணவரை இழந்த இவர், சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகே உள்ள லகுவம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வீரபாண்டி ஒன்றிய திமுக பிரதிநிதி தம்பிதுரை என்பவரின் இரண்டு மகள்களும் லகுவம்பட்டி அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவருடைய மனைவி ரதியா, இதே பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இது மட்டுமின்றி, தம்பிதுரை இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராகவும் இருக்கிறார்.
இதனால் திமுக பிரமுகர் தம்பிதுரை, லகுவம்பட்டி அரசுப்பள்ளிக்கு தினமும் சென்று வருவதோடு, பள்ளி நிர்வாக விவகாரங்களிலும் அடிக்கடி மூக்கை நுழைப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 2ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார் தம்பிதுரை. அப்போது ஆசிரியர் உமா, தன்னுடன் பணியாற்றி வரும் சக ஆசிரியர் சந்தோஷ்குமார் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்த அவர், தனது அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். இதைக் கவனித்துவிட்ட ஆசிரியர் உமா, அவரை கண்டித்தார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உமாவுக்கு ஆதரவாக ஆசிரியர் சந்தோஷ்குமாரும், தம்பிதுரையை அலைபேசியில் படம் பிடித்துள்ளார். ஆத்திரம் அடைந்த தம்பிதுரை, 'ஆளுங்கட்சிக்காரனையே படம் பிடிக்கிறாயா?' எனக்கேட்டு, அவர்களிடம் இருந்து அலைபேசியை பிடுங்க முயற்சித்தார். அப்போது, ஆசிரியர் உமாவின் கையைப் பிடித்து முறுக்கியதாகத் தெரிகிறது. இந்த களேபரத்தில் சந்தோஷ்குமார், திமுக பிரமுகர் தம்பிதுரையை தள்ளி விட்டதில் அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கு வெளியே சென்ற தம்பிதுரை, ஆசிரியர் உமாவை, 'தைரியம் இருந்தா வெளியே வா. ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம்' என்று சத்தம் போட்டு அழைத்தார். அதற்கு ஆசிரியர் உமாவோ, 'கூப்பிட்ட உடனே வர நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி இல்ல. வேலையை பார்த்துக்கிட்டு போயா...,' என்று பதிலடி கொடுத்தார். இந்த சம்பவத்தை, பள்ளி மாணவர்களும், அந்தப் பகுதி மக்களும் திரண்டு வந்து பார்த்ததால், சம்பவ இடமே பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையடுத்து அன்று மாலை ஆசிரியர் உமா, இரும்பாலை காவல்நிலையத்தில் தம்பிதுரை மீது புகார் அளித்தார். அவர் தன்னை கையை பிடித்து தாக்கியதாகவும், சாதி பெயரைச் சொல்லியும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார். அதன்பேரில், காவல்துறையினர் தம்பிதுரை மீது சாதி வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். புகார் அளிக்க ஆசிரியர் உமா தரப்பில் சக ஆசிரியர் சந்தோஷ்குமார் மற்றும் லகுவம்பட்டி கிராம மக்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் இரும்பாலை காவல்நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இதற்கிடையே, காயம் அடைந்த தம்பிதுரை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரும், ஆசிரியர் உமா தன்னை தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக புகார் அளித்து இருந்தார். இதன்பேரில் உமா மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தம்பிதுரையை ஜன. 5ம் தேதி மாலையில் இரும்பாலை காவல் ஆய்வாளர் சாரதா மற்றும் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
லகுவம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கடந்த இரண்டு ஆண்டாகவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. அங்குள்ள ஆசிரியர்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு மொட்டை பெட்டிஷன்கள் அனுப்புவது தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராக திமுக பிரமுகர் தம்பிதுரையை, வீரபாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர்தான் பரிந்துரை செய்தார். தம்பிதுரை தினமும் பள்ளிக்கு வருவதும், தேவை இல்லாமல் பள்ளி நிர்வாகத்தில் தலையிடுவதும் தொடர்ந்து வருகிறது. மேலும், இந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சந்தோஷ்குமாரும், தம்பிதுரையும் மிக நெருக்கமான நண்பர்கள்தான். அவருடைய, 'சரக்கு' செலவுக்குக்கூட அடிக்கடி சந்தோஷ்குமார்தான் பணம் கொடுப்பார்.
சில நாள்களுக்கு முன்பு, காலை உணவுத் திட்டத்திற்கான உணவுப் பொருள்களை வைப்பதற்கு பள்ளியில் ஒரு அறையை ஒதுக்கித் தரும்படி தம்பிதுரை கேட்டார். அதற்கு ஆசிரியர்கள் இருவரும் மறுத்து விட்டனர். அதில் இருந்து அவர்களுக்கும் தம்பிதுரைக்கும் உரசல் ஆரம்பித்து விட்டது. இதுமட்டுமின்றி, நன்றாக படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் உமா மெடல் கொடுத்து கவுரவித்துள்ளார். தம்பிதுரையின் மகள்களுக்கு மட்டும் மெடல் தரவில்லை என்கிறார்கள். இதனால் கடுப்படைந்த தம்பிதுரை, இதுகுறித்து ஜனவரி 2ம் தேதி உமாவிடம் கேட்கப்போக அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இப்போது நடந்த சம்பவத்திற்கு இவைதான் காரணம்,'' என்கிறது பள்ளிக்கல்வித்துறை வட்டாரம்.
இது ஒருபுறம் இருக்க, லகுவம்பட்டி ஆசிரியர் சந்தோஷ்குமார் மீது மூட்டை மூட்டையாக புகார் புஸ்தகம் வாசிக்கின்றனர் மற்ற ஆசிரியர்கள். ''லகுவம்பட்டி அரசுப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக உள்ள சந்தோஷ்குமார் குழந்தைகளுக்கு நன்றாக பாடம் நடத்தக்கூடிய திறமையான ஆசிரியர்தான். அதன்மூலமாக உள்ளூர் மக்களிடம் நன்கொடை திரட்டி பள்ளிக்கூட வளர்ச்சிக்கு சில பணிகளைச் செய்து கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட நல்ல பெயர் காரணமாக, லகுவம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப்பள்ளிக்கு வந்து பாடம் நடத்தச் சொல்வது; பள்ளித் தலைமை ஆசிரியர் பேச்சுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படுவதுமாக இருந்துள்ளார்.
சாதாரணமாக தலைமை ஆசிரியரிடம் பேச வேண்டிய விஷயங்களைக்கூட அவருக்குத் தெரியாமல் உயர் அலுவலர்களிடம் பேசுவது; சக ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தும் முன்பே, வாட்ஸ்ஆப் குழுவில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிப்பது என தொடர்ந்து ஒழுங்கீனமாகச் செயல்பட்டு வருகிறார். இவருடைய ஆதிக்கம் காரணமாக சில ஆசிரியர்கள் இந்தப் பள்ளியில் பணியாற்ற முடியாமல் வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். நாகராஜன் என்ற ஆசிரியரை இவர் தொடர்ந்து மிரட்டி வந்ததால், அவரும் பாதியிலேயே ஓட்டம் பிடித்து விட்டார்.
தன் மீது சக ஆசிரியர் யாராவது புகார் சொன்னால் அந்த ஆசிரியர் மீது வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி தவறான பிம்பத்தை ஏற்படுத்தி வந்துள்ளார். மக்களிடம் நல்ல பெயர் உள்ளது என்பதற்காக தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரை அதிகாரம் செய்வதை யாருமே ரசிக்கவில்லை. இதுமட்டுமின்றி ஆசிரியர் சந்தோஷ்குமாரும், ஆசிரியர் உமாவும் குறித்தும் பேச்சு நிலவுகிறது. இந்த விவகாரங்களால்தான் லகுவம்பட்டி அரசுப்பள்ளி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. ஆசிரியர் சந்தோஷ்குமார் மீதான அடுக்கடுக்கான புகார்கள் குறித்து விசாரிக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
அந்த அறிக்கையின்படி, அரசு ஊழியர் நடத்தை விதிகள் பிரிவு 17ஏ-இன் கீழ், ஆசிரியர் சந்தோஷ்குமாரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. வழக்கமாக விளக்கம் கோரப்பட்டால் ஓரிரு பக்கங்களில் பதில் அனுப்புவார்கள். ஆனால் சந்தோஷ்குமாரோ இதற்கும் திமிராக அரை கிலோ அளவுக்கு பேப்பர்களை வைத்து பதில் அளித்துள்ளார். விரைவில் ஆசிரியர் சந்தோஷ்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது'' என லகுவம்பட்டி பள்ளியின் சர்ச்சைக்கான பின்னணி குறித்து விவரித்தார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதற்கிடையே, ஆசிரியர்கள் உமாவும், சந்தோஷ்குமாரும் ஒரே நேரத்தில் தலைமறைவாகி விட்டனர். தற்போது திமுக பிரமுகரை தாக்கிய புகாரின்பேரில் ஆசிரியர் உமாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக கல்வி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ''ஆசிரியர்கள் இருவரும் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக வாய்மொழியாக சக ஆசிரியர் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்'' என்றார்.
இதையடுத்து நாம் ஆசிரியர் சந்தோஷ்குமாரை தொடர்பு கொள்ள அவருடைய அலைபேசி எண்ணில் அழைத்தோம். அழைப்பை ஏற்ற பெண் ஒருவர், 'இது சந்தோஷ்குமாரின் எண் இல்லை,' என்றார். நாம் அழைத்த எண், சரியானதுதான் என்பதை பள்ளிக்கல்வித்துறை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தினோம். இருந்தும் சந்தோஷ்குமார் தரப்பில் 'ராங் நம்பர்' என்று சொல்ல வைக்கப்பட்டதன் மர்மத்தை அவர்தான் அவிழ்க்க வேண்டும்.
ஆசிரியர் உமாவின் அலைபேசியை எடுக்காததால், அவரின் விளக்கத்தைப் பெற இயலவில்லை.
சமுதாயத்திற்கு முன்னுதாரணாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது, அவர்கள் மீதான மாண்பை சீர்குலைத்து வருகிறது.