சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மாரத்தான் போட்டியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இப்போட்டியை தொடங்கி வைத்தார். 'சென்னை ரன்னர்ஸ்' அமைப்பு சார்பில் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். 42 கிலோமீட்டர், 32 கிலோமீட்டர், 21 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என நான்கு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. நேப்பியர் பாலத்தில் துவங்கிய 10 கிலோமீட்டருக்கான மாரத்தான் போட்டியை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார்.
இப்போட்டியில் இளைஞர்கள், பெண்கள், தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் பங்கேற்றுள்ளனர். சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை 4 மணி முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியானோர் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.