![Man arrested for swindling Rs 8 lakh for buying seats study MBBS in Erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/hzLWtVQM4XpzLOb5HTYAd_3ibsdJPjSWdU6IMrzbqQw/1691039790/sites/default/files/inline-images/994_145.jpg)
ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஜாகிர் உசேன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் டெய்லர் கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில சீட் வாங்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கடலூரைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர், ஜாகிர் உசேனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் உங்கள் மகளுக்கு சீட் வாங்கித் தருவதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை ஜாகிர் உசேன் உண்மை என்று நம்பியுள்ளார். பின்னர் சந்திரமோகன் அவரிடம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இவ்வாறாக ஜாகிர் உசேனிடமிருந்து சந்திரமோகன் பல தவணைகளாக மொத்தம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியது போன்று மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி கொடுக்கவில்லை. தொடர்ந்து ஜாகிர் உசேன் சந்திரமோகனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது போனை எடுக்காமல் பல நாட்கள் இருந்துள்ளார். இதனை அடுத்து போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜாகிர் உசேன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கருங்கல்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்து வந்த சந்திரமோகனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரமோகன் சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், சென்னை சென்று சந்திரமோகனைக் கைது செய்து ஈரோட்டிற்கு அழைத்து வந்தனர். மேலும் சந்திரமோகனிடம் நடத்திய விசாரணையில், அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து வருவதாகவும், அதன் மூலம் ஜாகிர் உசேனின் எண்ணை அறிந்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் மோசடிக்குப் பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜானகிராமன் கணேசன், கௌசல்யா ஆகியோரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மீது கடலூரில் பண மோசடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.