சினிமா ரசிகர்களையும் மதுரையையும் ஒருக்காலும் பிரிக்க முடியாது. சினிமாவுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதில் நம்பர் ஒன் ரசிகர்கள் ஆக இருக்கிறார்கள் மதுரைக்காரர்கள்.
1931-ல் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸில் நடித்த டி.பி.ராஜலட்சுமியை ‘சினிமா ராணி’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். சினிமா கலைஞர் ஒருவருக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது என்றால், அது டி.பி.ராஜலட்சுமிக்குத்தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலிருந்து இன்று வரையிலும் மதுரையில் தெருவுக்குத் தெரு ரசிகர் மன்றங்கள் உண்டு. உதயநிதி உட்பட தமிழ் சினிமா ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் இங்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. சினிமா பிரபலங்களுக்கு பட்டம் அளித்துப் பாராட்டுவிழா நடத்துவது மதுரையில் வாடிக்கையாக நடப்பதுதான்.
காலம் மாறலாம். ஆனால், மதுரை ரசிகர்களின் சினிமா ரசனை மட்டும் மாறவே இல்லை. 16-ஆம் தேதி மதுரை வெற்றி தியேட்டரில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பார்க்கச் சென்றேன். இடைவேளையின்போது, தியேட்டருக்குள் மிகவும் கருப்பாக இருந்த கண்ணாடி அணிந்த நபர் ஒருவர் பக்கத்தில் நின்று பலரும் செல்பி எடுத்தனர். பெண்களும் ஆர்வம் காட்டினர். “இவர் யாரு?” செல்பி எடுத்துக்கொண்ட ஒருவரிடம் கேட்டேன். உதட்டைப் பிதுக்கினார். இன்னொருவர் பதில் சொன்னார்.
“யூ டியூப்ல வர்றவராம். இந்தப் படத்தோட டீம்ல இவரும் இருக்காராம். அடுத்து ஒரு சினிமா டைரக்ட் பண்ணப் போறாராம்.” என்று அவர் சொன்னதெல்லாம் ‘ராம்’களாகவே இருந்தன. ஒருவர் செல்பி எடுத்தால் போதுமே! படம் பார்க்க வந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் படையெடுத்துவிட்டார்கள். அவரை மொய்த்தார்கள். பிறகுதான் தெரிந்தது, படத்தில் ஹீரோ ரியோ ராஜுக்கு இணையாக வரும் காமெடி நடிகர் விக்னேஷ்காந்தும் கடைசி வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது. அவ்வளவுதான்.. படத்தைக்கூட பார்க்காமல் விக்னேஷுடன் செல்பி எடுப்பதில் ஆர்வமானார்கள் ரசிகர்கள். தியேட்டர் செக்யூரிட்டி வந்து ரசிகர்களை அவரவர் சீட்டுக்குப் போகச் சொல்லி விரட்டினாலும், யாரும் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. பிறகென்ன? படம் முடியும்வரையிலும் செல்ஃபி ஃப்ளாஷ் மழைதான்!
சினிமா ரசனை பொங்கி வழியும் மதுரை ரசிகர்களைப் போல் ஒட்டுமொத்த தமிழகமும் பழையபடியே தொடர்ந்து இருந்துவிட்டால், அடுத்த தமிழக முதல்வர் நிச்சயம் ஒரு சினிமா ஸ்டார்தான்!