கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரையொட்டியுள்ள அண்ணாமலைநகர் மருத்துவகல்லூரி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த ஆகஸ்ட் 20-ந்தேதி இரவு கலுங்குமேட்டை சேர்ந்த பாண்டியராஜ்(எ) கோழிபாண்டியன் த/பெ கலியபெருமாள் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வடமூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் (27), கும்பகோணத்தை சேர்ந்த கதிரவன்(22), கடலூரை சேர்ந்த ஜெயசீலன்(22) ஆகியோர் ஹோட்டலுக்கு வந்து வெடிகுண்டு வீசியதில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ஆய்வாளர் தேவேந்திரன் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்த மூன்று பேர் உள்ளிட்ட கலுங்குமேட்டை சேர்ந்த ராஜா, மணி, மஞ்சுளா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரத்குமார் மீது அண்ணாமலை நகர் , பரங்கிப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகள் உள்ளன. கதிரவன் மீது கும்பகோணம், விழுப்புரம் நாச்சியார்கோயில்ஆகிய காவல் நிலையங்களில் கொலை மற்றும் வெடிகுண்டு வழக்குகள் உள்ளன. வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயசீலன் ஆகிய மூன்றுபேரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.