மழை வேண்டி அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டது. அதன்படி, விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று யாக பூஜைகள் நடந்தன. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த யாக பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மழை வேண்டியும், வருண பகவான் அருள் வேண்டியும், வருணபூஜை யாகம், கஜபூஜை யாகம், அஸ்வபூஜை யாகம், கோ பூஜை யாகம், சாந்தி பூஜை யாகம் என பூஜைகள் நடத்தினர். ஐந்துக்கும் மேற்பட்ட வேத ஓதுவார்களைக் கொண்டு பூரண கும்ப கலசங்கள் வைத்து யாக வேள்வி நடைபெற்றது. அதன்பிறகு, வருணபகவானிடம் மழை வேண்டி, யாக வேள்வியில் நவதானியங்கள் செலுத்தியும், பூரணாகுதி செலுத்தியும் யாகவேள்வி நடந்தது. யானை, குதிரை, பசு மாடுகளை வைத்தும் பூஜைகள் நடைபெற்றன.
‘யாகம் நடத்தினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. சரிதான்! ஆனால்..?” என்று நம்மிடம் இழுத்தார், அக்கட்சியின் சிறுபான்மை பிரிவில் பொறுப்பு வகிக்கும் அந்த ஊர்க்காரர். அவர் சொன்ன விஷயம் –
“எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளிலெல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தனர். உலகமே ஒருமித்த உணர்வுடன் சர்வமத பிரார்த்தனை நடத்தியதால், சிகிச்சையில் குணமடைந்து நல்லபடியாக தமிழகம் திரும்பினார். அதே வழியில், ஜெயலலிதா உடல் நலம் பெறவும் சர்வமத பிரார்த்தனைகள் நடந்தன. உலகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், அவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டியும்கூட, சர்வமத கோவில்களில் பூஜைகள், பிரார்த்தனைகள் நடந்தன. மத்தியில் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பா.ஜ.க.வின் தயவு வேண்டும் என்பதாலோ என்னவோ, தற்போது அதிமுக நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க. வழியிலேயே அதிமுகவும் பயணிக்கிறது. மழை வேண்டி இந்து கோவில்களில் மட்டும் யாகம் நடத்தவேண்டும் என்ற உத்தரவை அப்படித்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். நடித்த ஒளிவிளக்கு திரைப்படத்தில், அவர் உயிருக்குப் போராடும் காட்சியில், ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்..’ என்று உருக்கமாகப் பாடுவார் சவுகார் ஜானகி. அந்தப் பாடல் முடியும்போது, ‘மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு! இறைவா! இறைவா!’ என்று அவர் கண்ணீர் விடும்போது, திரையில் கோவில், மசூதி, தேவாலயம் என மாறி மாறி காட்டுவார்கள். அனைத்து மதத்தினரும் பிரார்த்தனையில் ஈடுபடுவதைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். எம்.ஜி.ஆர். உடல்நலம் பெறவேண்டும் என்ற வேண்டுதலை, கட்சித் தொண்டர்கள் பட்டி, தொட்டியெங்கும் இந்தப் பாடலை ஒலிபரப்பி அப்போது வெளிப்படுத்தினார்கள்.
மழை வேண்டி, கோவில்களில் மட்டும்தான் யாகபூஜை நடத்த வேண்டுமா? சர்வமத பிரார்த்தனை நடத்தினால் குறைந்தா போய்விடும் கட்சி? இதேரீதியில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டால், கட்சியில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தினர் மனதில் மாற்று சிந்தனை ஏற்பட்டு, விலகிவிட நேரிடும் என்பதை அதிமுக தலைமை ஏன் உணரவில்லை?” என்றார் ஆதங்கத்துடன்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை நடத்தாமல் இன்றைய அதிமுக தலைமை ஏன் தடுமாறுகிறது?