சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இவருடைய கணவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, சுமதி அந்த பகுதியில் பால்பண்ணை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை சுமதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சுமதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதில், அதிர்ச்சியடைந்த சுமதி தனது வீட்டிலேயே மயங்கி விழுந்தார். குண்டு சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும், வீட்டிற்குள் மயங்கிய நிலையில் இருந்த சுமதியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசை விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “பெருகிவரும் ஆயுதக் கலாச்சாரம்! சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு! திமுக ஆட்சியில் அச்சத்தில் மக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து,பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுமதிக்கும், அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறினால் தான் இந்த சம்பவம் நடத்தப்பட்டது என்று தெரியவந்தது. எனவே, குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசியதை சட்டம் ஒழுங்கு பிரச்சனை போல் பதிவிட்டிருந்த அர்ஜூன் சம்பத்தை, செக்கானூரனி காவல் நிலையத்தில் நாளை நேரில் வந்து ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட எஸ்.பி. சம்மன் அனுப்பி உள்ளார்.