கிருஷ்ணகிரி மாவட்டம், குண்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜலபதி (30). இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்குவாரியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் கீழ்காட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா என்கிற பொறியியல் பட்டதாரி பெண்ணுடன் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதைப் பற்றி தனது பெற்றோரிடம் அபிசால்மியா கூறியுள்ளார். ஆனால், அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய அபிசால்மியா தனது காதலர் ஜலபதியை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த நாளடைவில், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்த பெண் குழந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தது.
இக்குழந்தை இறந்ததால் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்ட அபிசால்மியா கடந்த 6 ஆம் தேதி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. முழுக்க முழுக்க நான் தான் காரணம். என் பாப்பாவ பார்க்கணும் போல இருக்கு” என்று எழுதியிருந்தார். அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தனது குழந்தையும், மனைவியும் உயிரிழந்ததால் ஜலபதி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக நேற்று முன்தினம் (11-10-23) ஜலபதியும் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஜலபதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக 4 பக்கத்தில் எழுதிய உருக்கமான ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “என்னால் என் மனைவி அபியையும், எனது குழந்தையையும் பிரிந்து வாழ முடியவில்லை. அவர்கள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் என்ன வேலை? அதனால் தான் இந்த முடிவு. திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே” என்று குறிப்பிட்டிருந்தது. ஒரே குடும்பத்தில் குழந்தை, தாய், தந்தை என அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.