சென்னை தி.நகரில் நடைபெற்ற எழுத்தாளர் மா.நன்னன் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தந்தை பெரியார்,கலைஞர், நன்னன் ஆகியோர் மொழிக்காக போராடியவர்கள். இறுதி வரைக்கும் உழைத்தவர்கள் இவர்கள். இவர்களால் சும்மா இருக்க முடியாது. இவர்கள் மட்டுமல்ல இவர்கள் பக்கத்தில் இருப்பவர்களையும் சும்மா விட மாட்டார்கள். நன்னன் எழுதிக் கொண்டே இருந்தார். எனக்கென்ன பெருமை என்றால் பல்லாயிரம் பக்கங்களை எழுதி குவித்திருக்கக்கூடிய புலவர் நன்னனின் விரல்களுக்கு விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தவன் நான். அதை இன்றைக்கும் நினைத்து பெருமையாக கருதிக் கொண்டிருக்கிறேன்.
அவரைப் பொறுத்தவரை என்னோடு வாரத்திற்கு இரண்டு முறையாவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார். அப்படி தொடர்பு கொள்கின்ற போதெல்லாம் உங்கள் அறிக்கையை பார்த்தேன்; உங்க பேச்சை படித்து பார்த்தேன் நன்றாக இருந்தது என்பதோடு அதைத் தாண்டி அறிவுரைகளையும் வழங்குவார். திடீரென ஒரு வாரம் அவரிடத்தில் இருந்து எனக்கு போன் வரவில்லை. நானே நினைத்துக் கொண்டேன் உடல்நிலை சரியில்லை போல இருக்கு எனக் கருதி உடனே அவரை நேரில் பார்த்து விசாரித்தேன். ஆமாம் என்று சொன்னார். அதனால்தான் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொன்னார். அந்த நேரத்தில் முரசொலி பொங்கல் மலர் வெளியாகி இருக்கிறது. அந்த மலரை கொண்டு போய் கொடுத்தேன். அவர் பெரியார் கணினி புத்தகத்தை எனக்கு கொடுத்தார்.
திடீரென 2017 ஆம் ஆண்டு அறிவாலயத்திற்கு வந்தார் .உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்திலேயே வந்தார். அனைவரையும் பார்த்துவிட்டு போக வேண்டும் உற்சாகப்படுத்திவிட்டு போக வேண்டும் என்று தான் நான் வந்தேன் என்று சொல்லிவிட்டு போனார். நவம்பர் மாதம் ஏழாம் நாள் நன்னன் மறைந்தார். மறைந்தார் என்று சொல்ல முடியாது. அவர் மறைந்த பிறகும் புத்தகம் அவர் பெயரால் வெளிவந்து கொண்டிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக, மொழிக்காக பாடுபடுவதும் முக்கியம். சிந்தனையால்; செயலால்; எழுத்தால் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர் புலவர் மா.நன்னன். அவரின் பேச்சு திராவிட இயக்க வகுப்பு நடத்துவது போன்று இருக்கும். திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அனைவரும் கலைஞரின் வெளித்தோன்றல்கள் தான். தங்களுக்கு ஒரு தந்தை பெரியார் இல்லையே, திராவிட இயக்கம் இல்லையே என்ற ஏக்கம் மற்ற மாநிலங்களுக்கு வந்துள்ளது. புலவர் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
தினந்தோறும் தவறான பாடங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் ஆளுநர். ஆளுநர் அவ்வாறு பேசி வருவதை நமது கொள்கைக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்து வருகிறது. சனாதனம், வர்ணாசிரமம் பற்றி ஆளுநர் தினமும் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பேசி வருவதை நமக்கு பிரச்சாரமாக அமைந்து கொண்டிருக்கிறது. ஆளுநர் தொடர்ந்து இவ்வாறு பேசினால் தான் நாம் நமது கொள்கையை வளர்க்க முடியும்'' என்றார்.