கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 527 பேருக்கு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு பிறப்பித்து தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவால் மதுபானக்கடைகள் மூடப்பட்டதையடுத்து, மதுபானம் அருந்துவோர் சிலர் மதுவுக்கு பதிலாக பல மாற்று வழிகளை கையாண்டு, வேதிப்பொருட்களை அருந்தி உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்து வரும்நிலையில், மதுபானக்கடைகள் தமிழகத்தில் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மதுவிரும்பிகளிடம் இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தடைசெய்யப்படாத பகுதிகளில் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.